நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முட்டை வியாபாரியிடம் ரூ.5 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
காங்கேயத்தை அடுத்துள்ள முத்தூரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தியதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முட்டை வியாபாரியிடம் இருந்து ரூ.4 லட்சத்து 96 ஆயிரத்து 140 பறிமுதல் செய்யப்பட்டது.
காங்கேயம்,
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர் கோழிப்பண்ணைகளில் இருந்து முட்டை வாங்கி வெளியூர்களில் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வேனில் முட்டைகளை ஏற்றி கொண்டு போய் கேரள மாநிலம் பாலக்காட்டில் விற்பனை செய்து விட்டு மீண்டும் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 4.30 மணியளவில் காங்கேயத்தை அடுத்து முத்தூர் பஸ்நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கவிதாவின் தலைமையில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது வேகமாக சென்ற ஒரு வேனை மடக்கி சோதனை போட்டனர்.
அதில் இருந்த முட்டை வியாபாரி ராமசாமியிடம் ரூ.4 லட்சத்து 96 ஆயிரத்து 140 இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த தொகையை முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதாக கூறி அந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட தொகை காங்கேயம் தாசில்தார் விவேகாந்தனிடம் ஒப்படைக்கப்பட்டது. பாலக்காட்டில் முட்டைகளை விற்பனை செய்துவிட்டு பணத்துடன் ராமசாமி நாமக்கலுக்கு திரும்பியபோதுதான் பறக்கும் படை அதிகாரிகள் இவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story