தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம்


தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம்
x
தினத்தந்தி 7 April 2019 11:15 PM GMT (Updated: 7 April 2019 4:54 PM GMT)

தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார்.

தர்மபுரி, 

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கோவிந்தசாமி போட்டியிடுகிறார். இவர்களை ஆதரித்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒடசல்பட்டி, ராணிமூக்கனூர், தொங்கனூர், சிந்தல்பாடி, வகுத்துப்பட்டி, வடகரை, தென்கரைக்கோட்டை, ராமியனஅள்ளி, தாளநத்தம், கேத்துரெட்டிப்பட்டி, பில்பருத்தி, ரேகடஅள்ளி, புளியம்பட்டி நடூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டங்களுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டங்களில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது வழிகாட்டுதலின்படி பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகின்றனர். இந்த ஆட்சியில் பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. சட்டம், ஒழுங்கு அமைதியாக இருக்கிறது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீராக இல்லாததால் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் மீண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். உங்கள் வீட்டு பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க அ.தி.மு.க. தலைமையிலான எங்கள் அணியால் மட்டுமே முடியும். இதை பொதுமக்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க. கூட்டணியின் நோக்கம் மக்களின் முன்னேற்றம். நம்முடைய அணியில் உள்ள தலைவர்கள் விவசாயிகள். விவசாயம் சார்ந்த கூட்டணி. ஆனால் தி.மு.க. தலைமையிலான எதிரணியில் உள்ள தலைவர்களுக்கு விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாது. தி.மு.க. தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலினால் நிறைவேற்ற முடியாது. நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும், காங்கிரசும் தான். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிரச்சினை, காவிரி பிரச்சினை, ஸ்டெர்லைட், மீத்தேன் பிரச்சினைக்கும் தி.மு.க.தான் காரணம். இதனை மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். அந்த கூட்டணிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் ஏன் வந்துள்ளது என்பதை மக்கள் சிந்தித்து பார்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.கோவிந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

இந்த பிரசார கூட்டங்களில் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் மதிவாணன், பா.ம.க. மாநில துணை அமைப்பு செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட செயலாளர் இமயவர்மன், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் ரகு, பா.ம.க. ஒன்றிய செயலாளர்கள் சென்ன கிருஷ்ணன், தென்னரசு, சின்னராஜ், சக்திவேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story