குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் கைது
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வானூர்,
வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு அருகே உள்ள மாட்டுக்காரன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் (வயது 19), இவர் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். மாணவர் நரேஷும், அப்பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்ததாகவும், அடிக்கடி அவர்கள் சந்தித்து பேசி வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் இவர்களின் பழக்கம் பற்றி தெரிந்ததும் மாணவியின் பெற்றோர் மாணவியை கண்டித்து, நரேஷுடன் பழகக்கூடாது என எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து அந்த மாணவி, காதலன் நரேஷிடம் பேசுவதை தவிர்த்து அவரை சந்திக்காமல் இருந்து வந்தார். அதனால் நரேஷ் ஆத்திரம் அடைந்தார். அவர் அந்த மாணவியை மீண்டும் தன்னிடம் பேசுமாறு கூறி மிரட்டினாராம்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நரேஷ் தனது காதலியை சந்தித்து பேசினார். அப்போது உன்னிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று கூறி மாணவியை சேதராப்பட்டில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த மாணவி மயங்கியதும், நரேஷ் மற்றும் அவருடைய நண்பர்களான கார் டிரைவர்கள் பாகூர் அருகே உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்த ராஜா என்ற ராக்கெட் ராஜா, மொரட்டாண்டியை சேர்ந்த வெங்கடேஷ் என்ற சூர்யா ஆகியோருடன் சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன்னுடைய தாயிடம் கூறி கதறி அழுதார். அது குறித்து மாணவியின் தாய் ஆரோவில் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையைத் தொடர்ந்து என்ஜினீயரிங் மாணவர் நரேஷ், அவருடைய நண்பர்களான ராஜா (32) மற்றும் சூர்யா (21) ஆகியோர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story