சேத்தியாத்தோப்பு அருகே 2 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்தது ரூ.2 லட்சம் சேதம்


சேத்தியாத்தோப்பு அருகே 2 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்தது ரூ.2 லட்சம் சேதம்
x
தினத்தந்தி 8 April 2019 3:30 AM IST (Updated: 8 April 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே 2 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு அருகே அகரசோழத்தரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்கண்ணன். இவருடைய மனைவி வசந்தா. நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் வெளியூருக்கு சென்றுவிட்டனர். இதனால் இவர்களுடைய மகன் ஆனந்தபாபு மட்டும் கூரை வீட்டில் இருந்தார். இந்த நிலையில் இரவு திடீரென கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இந்நிலையில் காற்று பலமாக வீசியதால் தீ அருகில் உள்ள தையல்நாயகி என்பவரின் கூரை வீட்டுக்கும் பரவி எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு மற்றும் ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இருப்பினும் தீ விபத்தில் முத்துக்கண்ணன், தையல்நாயகி ஆகியோரின் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில், துணிகள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதன் மொத்த சேத மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீவிபத்து குறித்து சோழத்தரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story