மோடி ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் கி.வீரமணி பேச்சு
மோடி ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று நீடாமங்கலத்தில் கி.வீரமணி பேசினார்.
நீடாமங்கலம்,
நீடாமங்கலத்தில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை ஆதரித்து திராவிடர் கழகத்தின் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்த தேர்தல் என்பது பாசிசத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடைபெறும் போட்டி. நம்முடைய மதசார்பற்ற கூட்டணி பதவிக்காக வந்த கூட்டணி அல்ல. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் அமையும். மக்கள் விரோத மோடி ஆட்சி மீண்டும் வரக்கூடாது என மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தமிழகத்தில் ஒரு கொத்தடிமை ஆட்சி நடைபெறுகிறது. இந்தியாவை காக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமா? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. மோடி வித்தைகள் தென்நாட்டில் எடுபடவில்லை.
வடநாட்டில் முஸ்லீம் ஒருவர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பதற்காக அவரை அடித்து கொன்றார்கள். பசுபாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் சித்ரவதை செய்தார்கள். பசுக்கு உள்ள பாதுகாப்பு கூட மனிதர்களுக்கு இல்லை. மனிதர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி மோடி ஆட்சி.
வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் அதிகம். ஓட்டுக்காக அங்குள்ளவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடலாம் என்கிறார்கள் பா.ஜ.க.வினர். முதல்–அமைச்சர்களான கமல்நாத், மம்தா ஆகியோருக்கு வருமான வரித்துறையை வைத்து நெருக்கடி கொடுக்கிறார்கள்.
தமிழகத்திலும் வருமான வரித்துறையை வைத்து வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள். அது தமிழகத்தில் எடுபடாது.
அ.தி.மு.க.கொள்கையை விட்டு விட்டது. அ.தி.மு.க. கூட்டணி பதவிக்காக வந்த கூட்டணி. மோடிக்கு எதிரான அலை இந்தியா முழுவதும் வீசிக்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் மோடி அலை வீசுவது போன்ற தவறான கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம். அது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு. பா.ஜ.க ஆட்சியில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. மத்தியில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் திராவிடர்கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சித்தமல்லி சோமசுந்தரம், ராசமாணிக்கம், திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் நீலன்.அசோகன், நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் விசு.அண்ணாதுரை, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.