100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி தேர்தல் வாசகம் கொண்ட கோலப்போட்டி வரிச்சிக்குடியில் நடந்தது


100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி தேர்தல் வாசகம் கொண்ட கோலப்போட்டி வரிச்சிக்குடியில் நடந்தது
x
தினத்தந்தி 8 April 2019 4:30 AM IST (Updated: 8 April 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி காரைக்கால் வரிச்சிக்குடியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கோலப்போட்டி நடைபெற்றது.

காரைக்கால்,

வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி காரைக்கால் வரிச்சிக்குடியில் இயங்கி வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தேர்தல் வாசகங்கள் கொண்ட கோலப்போட்டிகள் நடத்தப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 70 மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டு சுமார் 50 கோலங்களை பதிவு செய்தனர். மேலும் கோலத்தில் வருகிற 18-ந் தேதி கண்டிப்பாக வாக்களிப்போம். நேர்மையான முறையில் வாக்களிப்போம். பணம் வாங்காமல் வாக்களிப்போம். எனது வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ், கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த நீங்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். நீங்கள் வாக்களிப்பதோடு உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் வருகிற 18-ந் தேதி வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். இளம் வாக்காளர்களால், முக்கியமாக மாணவர்கள் மற்றும் சுய உதவி குழுவை சேர்ந்த நீங்கள் நேர்மையான முறையில் வாக்களிக்க பிறருக்கு உந்துகோலாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அல்லி, வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா, சமூக நலத்துறை உதவி இயக்குனர் காஞ்சனா, கல்லூரி முதல்வர் சந்தனசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story