தூத்துக்குடி கடற்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு பட்டம் விடும் நிகழ்ச்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு


தூத்துக்குடி கடற்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு பட்டம் விடும் நிகழ்ச்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு
x
தினத்தந்தி 7 April 2019 9:45 PM (Updated: 7 April 2019 7:31 PM)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கடற்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு பட்டம் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கலந்து கொண்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் மாநகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பட்டம் விடும் நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது. மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது;-

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த தேர்தல்களை விட, வரும் தேர்தலில் அதிக அளவில் வாக்காளர்கள் வாக்களிக்க செய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் வீடுகளில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி துப்புரவு வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ரோச் பூங்கா பகுதியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்கேட்டிங் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் மாநகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பட்டம் விடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடந்த தேர்தலில் கிராமங்களை விட நகர்பகுதியில் வாக்கு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. எனவே பொதுமக்கள் அதிகளவில் வந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களித்திட வேண்டும். நடைபெற உள்ள தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்துடன் வாக்காளர் ஒப்புகைச்சீட்டு எந்திரம் பயன்படுத்தப்படுவதால் வாக்காளர்கள் தாம் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்து எந்தவித சந்தேகமின்றி தெரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் பொதுபார்வையாளர் துக்கிசயாம் பேயிக், தேர்தல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசலு, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் வீ.ப.ஜெயசீலன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story