மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பிரதீப் நந்திராஜோக் பதவி ஏற்றார்


மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பிரதீப் நந்திராஜோக் பதவி ஏற்றார்
x
தினத்தந்தி 7 April 2019 11:30 PM GMT (Updated: 2019-04-08T01:05:42+05:30)

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பிரதீப் நந்திராஜோக் நேற்று பதவி ஏற்றார்.

மும்பை, 

மும்பை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி நரேஷ் ஹரிசந்திர பாட்டீல் நேற்று முன்தினம் பணி ஓய்வுபெற்றார். எனவே மும்பை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த பிரதீப் நந்திராஜோக் நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவி ஏற்பு விழா நேற்று மலபார்ஹில்லில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்தது.

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பிரதீப் நந்திராஜோக் நியமிக்கப்பட்ட உத்தரவு வாசிக்கப்பட்டது. இதையடுத்து, தலைமை நீதிபதியாக பிரதீப் நந்திராஜோக் பதவி ஏற்றுக்கொண்டார். கவர்னர் வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதிக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தலைமை நீதிபதியும், கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து கவுரவித்தார்.

விழாவில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட மாநில மந்திரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பிரதீப் நந்திராஜோக் கடந்த 2002-ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதியாக பணிபுரிந்தார். அதன்பின்னர் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் ராஜஸ்தான் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story