பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 7 April 2019 10:45 PM GMT (Updated: 7 April 2019 8:00 PM GMT)

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர்,

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு பெரம்பலூர் தொகுதியில் வேட்பாளர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பெரம்பலூர் (தனி), குளித்தலை, துறையூர் (தனி), மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கி உள்ளது. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கையில் குளித்தலையில் 2,13,806 வாக்காளர்களும், லால்குடியில் 2,08,578 வாக்காளர்களும், மண்ணச்சநல்லூரில் 2,29,588 வாக்காளர்களும், முசிறியில் 2,21,936 வாக்காளர்களும், துறையூரில் 2,16,194 வாக்காளர் களும், பெரம்பலூரில் 2,86,397 வாக்காளர்கள் என மொத்தம் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 13,76,499 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 6,72,146, பெண் வாக்காளர்கள் 7,04,273, திருநங்கைகள் 80 பேர் உள்ளனர்.

வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்குகளை பதிவு செய்யும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர்களின் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவை அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் போலீசார் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்கள் அனைத்தும் பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்காக அந்த கல்லூரியில் பாதுகாப்பு அறைகள், தேர்தல் மேற்பார்வையாளர்கள் அறைகள், ஊடக மையம் ஆகியவை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் உள்ள ஜன்னல்கள் அனைத்தும் தகரம் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் வழியிலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளாக தகரம் கொண்டு அடைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைந்த பின்னர் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story