100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு அழைப்பிதழ்


100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு அழைப்பிதழ்
x
தினத்தந்தி 8 April 2019 4:30 AM IST (Updated: 8 April 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

நடைபெற உள்ள தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு வழங்குவதற்கான அழைப்பிதழ் தயார் நிலையில் உள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும், குன்னம் சட்டமன்ற தொகுதி சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டவையாகும். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 2,86,397 வாக்காளர்கள் வாக்களிக்க 332 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 2,60,294 வாக்காளர்கள் வாக்களிக்க 320 வாக்குச்சாவடி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அந்தந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் கடும் வெயிலிலும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான சாந்தா உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி திருமண அழைப்பிதழ் போன்று அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் அது வாக்காளர்களிடம் வழங்குவதற்கு தயார் நிலையிலும் உள்ளன. அந்த அழைப்பிதழில் கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பிதழ் என்கிற தலைப்பில் அன்புடையீர், நிகழும் மங்களகரமான ஸ்ரீ விகாரி வருடம் சித்திரை 5-ந் தேதி 18-04-2019 வியாழக்கிழமை சதுர்த்தி திதியும், ஹஸ்தம் நட்சத்திரம், சித்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம் தங்கள் அருகாமையில் உள்ள வாக்கு சாவடியில் நடைபெறுவதால் 18 வயது நிரம்பிய, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்களது குடும்பத்தின் 100 சதவீதம் வாக்கினை பதிவு செய்யும்படி அன்புடன் அழைக்கின்றோம் என்றும், அன்பளிப்பு பெறுவதும், அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றமாகும். வைபவம் பற்றிய மேல்விவரங்களுக்கு எண் 1950-ஐ தொடர்பு கொள்ளவும் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் வாக்காளர்களின் பெயர் எழுதி, அவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளது என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story