எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி குளிக்க சென்றபோது பரிதாபம்
எடப்பாடி அருகே, காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியானான்.
எடப்பாடி,
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகன் மகன் கோகுலப்பிரியன் (வயது 12). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இவனது மாமா முருகேசன் (37), சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் வசித்து வருகிறார்.
முருகேசன் கட்டிநாயக்கன்பட்டி பகுதியில் நடந்த திருவிழாவிற்கு வந்தார். திருவிழா முடிந்ததும் நேற்று மதியம் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அவருடன் கோகுலப்பிரியன் மற்றும் சிலர் சென்றனர்.
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது கோகுலப்பிரியன் தண்ணீரில் மூழ்கினான். அவனுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டான். இது குறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் அங்கு சென்றனர். பலியான கோகுலப்பிரியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story