போதிய பஸ்வசதிகள் செய்து கொடுக்காததால் புதிய பஸ்நிலைய புறக்காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பயணிகள்

போதிய பஸ் வசதி செய்து கொடுக்கப்படாததால் புதிய பஸ்நிலைய புறக்காவல் நிலையத்தை பயணிகள் முற்றுகையிட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் பழைய மற்றும் புதிய பஸ்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. பழைய பஸ்நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கோவை, சேலம், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. புதிய பஸ்நிலையத்தில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி இருப்பதால் பண்டிகை காலங்கள், விடுமுறை காலங்களில் ரெயில் நிலையம், பஸ்நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அந்த வகையில் பள்ளி விடுமுறை மற்றும் பிற காரணங்களுக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று முன்தினம் ஏராளமானோர் புறப்பட்டு சென்றனர். இதனால் இரவு சுமார் 8 மணியில் இருந்தே பயணிகளின் கூட்டம் வழக்கத்திற்கு அதிகமாகவே காணப்பட்டது. பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால் பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப போதிய பஸ் வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இரவு 11 மணி முதல் ஒருசில இடங்களுக்கே பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால் குடும்பத்துடன் தங்கள் ஊர்களுக்கு செல்ல காத்திருந்தவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவித்தனர். இரவு சுமார் 1 மணி வரை எந்த பஸ்சும் பஸ்நிலையத்திற்கு வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அங்குள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டனர். ஒருசில நிமிடங்களில் பஸ்கள் வந்து விடும் என்று பயணிகளை அவர்கள் சமாதானப்படுத்தினார்கள். ஆனால் சுமார் 3 மணிவரை பஸ்கள் எதுவும் வராததை தொடர்ந்து, பயணிகள் பஸ்நிலைய புறக்காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், போதிய பஸ்வசதி செய்து கொடுக்கவும் கோரிக்கை விடுத்தனர். பின்னர் சுமார் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மேல் அங்கு வந்த பஸ்களில் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் காலங்களில் வழக்கத்திற்கு அதிகமான பஸ்களை இயக்க போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.






