எதிர்க்கட்சியாக இருக்கும்போதே தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு


எதிர்க்கட்சியாக இருக்கும்போதே தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 April 2019 4:45 AM IST (Updated: 8 April 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சியாக இருக்கும்போதே தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்று தேர்தல் பிரசாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றம் சாட்டினார்.

திருப்பூர்,

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு மணிமாறன், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி மகேந்திரன் ஆகியோருக்கு வாக்கு சேகரிப்பதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். தாராபுரம் புதுக்காவல் நிலைய வீதி, மடத்துக்குளம் நால்ரோடு, உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு ஆகிய இடங்களில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேனில் நின்றபடி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். வெயிலையும், பசியையும் பொருட்படுத்தாமல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற நல்லஉள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விவசாய குடும்பத்தில் இருந்து வளர்ந்து வந்தவன் நான். உங்களைப்போல் நானும் ஒரு விவசாயி தான். மழையையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் உழைப்பவன் விவசாயி. அதனால் வெயிலை பற்றி நான் கவலைப்படுவதில்லை. வெயிலில் நின்று ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கின்ற வர்க்கம் விவசாயி. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பது தான் எனது முதல் வேலை. விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை கொடுப்பது தான் எங்களின் முதல் நோக்கம்.

தி.மு.க. சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது. வைகோ தி.மு.க.வில் இருந்து விலகி ம.தி.மு.க.வை தொடங்கினார். வெளியே சென்றவர் இப்போது மீண்டும் கூட்டணி அமைத்ததோடு மட்டுமில்லாமல் ஈரோடு தொகுதியில் தி.மு.க. சின்னத்தில் ம.தி.மு.க. வேட்பாளர் போட்டியிடுகிறார். இது சந்தர்ப்பவாத கூட்டணி இல்லையா?. விவசாயம் நிறைந்த பகுதியாக இருப்பதால் காய்கறி, பழங்கள் சேமித்து வைக்கும் குளிர்சாதன கிடங்கு வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படும். ஆசியாவில் மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் கொங்கு மண்டலத்தில் 900 ஏக்கரில் அமைக்கப்பட்டு பசு, ஆடு, கோழி நாட்டு இனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

உப்பாறு அணை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். வரதமாநதி உபரி நீரை நல்லதங்காள் அணைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தாராபுரம் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வசதிக்காக தனிப்பாதை ஏற்படுத்தப்படும். 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தில் குளங்கள் தூர்வாரப்படும். ஏழை விவசாய, கட்டிட, நெசவு தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற நலத்திட்டத்தை அறிவித்து வழங்கி வந்தோம். 60 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்று அறிவித்தோம். இப்போது கணக்கெடுப்பு செய்து 1 கோடி பேருக்கு தேர்தல் முடிந்ததும் வழங்கப்படும் என்று உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் இந்த திட்டத்தை எதிர்த்து மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் தடையாணை கேட்டார். ஆனால் முடியவில்லை. இப்போது தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு ரூ.1,000 மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஆனால் மக்களுக்கு நல்லது செய்தால் தி.மு.க.வுக்கு பிடிக்காது. ஏழை மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை தடுக்கும் கட்சி தி.மு.க.,

நமது மெகா கூட்டணியை பார்த்து மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் ஜூரம் வந்து விட்டது. பயத்தில் ஏதேதோ உளறுகிறார். மரியாதைக்குறைவாக பேசுகிறார். மரியாதை கொடுத்து பேசினால் மரியாதை கிடைக்கும். நாங்கள் கிராமத்தில் வாழ்ந்தவர்கள்.

மு.க.ஸ்டாலின் தந்தை கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்ததால் அவர் கட்சிக்கு வந்தார். துணை முதல்–அமைச்சர் ஆனார். ஆனால் நான் கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக முன்னேறி எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகி இந்த நிலையை எட்டியுள்ளேன். ஆனால் மு.க.ஸ்டாலின் கொல்லைப்புறம் வழியாக முதல்–அமைச்சராக துடிக்கிறார்.

வேளாண்துறைக்கு அதிகப்படியான வளர்ச்சி திட்டங்களை ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் ஏரி, குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு குடிமராமத்து திட்டத்தில் பராமரிக்கப்பட்டு அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 3 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. எஞ்சிய ஏரிகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு நிலத்தடி நீர் மேம்படுத்தப்படும். மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டி சேமித்து நிலத்தடி நீரை காத்து விவசாயிகளுக்கு தேவையான நீர் கொடுக்கப்படும். ஒரு சொட்டு நீர் கூட வீணாகாத வகையில் நீர்மேலாண்மை திட்டத்தை அரசு அமல்படுத்தி அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்காக 4 ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்களை நியமித்துள்ளோம். மாவட்டம் வாரியாக அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து கொடுக்க இருக்கிறார்கள். இதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை வந்தவுடன் எங்கெங்கெல்லாம் தடுப்பணை கட்ட வேண்டுமோ, அங்கெல்லாம் தடுப்பணைகள் கட்டப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

ஜெயலலிதா வழி வந்த அரசு மக்களுடைய அரசு. மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்கு போகும் இடங்களில் எல்லாம் தி.மு.க. தேர்தல் அறிக்கையை பற்றி பேசுகிறார். தேர்தல் அறிக்கையில் அவர் சொல்வதெல்லாம் பொய். அவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லாதது. இது மத்திய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல். யார் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்கான தேர்தல். மத்தியில் நிலையான பிரதமர் வந்தால் நாடு வளம்பெறும்.

ஆனால் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கான சட்டமன்ற தேர்தல் போல் பேசி வருகிறார். இவர் ஏதோ ஆட்சியில் இருப்பதை போல் மக்களுக்கு இந்த திட்டத்தை கொடுப்போம் என்கிறார். அவை அனைத்தும் பொய். ஏற்கனவே பச்சை பொய் அவர் கூறியிருக்கிறார். நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என்று சொல்லி யாருக்காவது கொடுத்திருக்கிறாரா?. இப்போது மட்டும் கொடுத்துவிடுவாரா?.

தமிழகத்தை ஆளுகின்ற கட்சி அ.தி.மு.க., நாங்கள் சொல்வது நடக்கும். ஆனால் மு.க.ஸ்டாலின் பச்சைப்பொய் சொல்கிறார். அதை தள்ளுபடி செய்வோம். இதை தள்ளுபடி செய்வோம் என்கிறார். மக்களை குழப்பி, அரசியல் நாடகம் ஆடி இன்றைக்கு வாக்குகள் பெறுவதற்காக அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தி.மு.க. தேர்தல் அறிக்கை. கவர்ச்சிகரமான திட்டத்தை கூறி தேர்தல் அறிக்கையை பொய் அறிக்கையாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். எப்படி அதை செய்ய முடியும். மக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம். ஆனால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை அப்படி அல்ல. எதை செய்வோமோ, அதை சொல்லியிருக்கிறோம். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்சி நடத்தி வருகிறோம்.

நமது கூட்டணி மெகா கூட்டணி. நமது கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வரும்போது விவசாயிகள் என்ன நினைக்கிறார்களோ அதை, வேட்பாளராக நிற்கும் மகேந்திரன் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் உங்களுக்காக குரல் கொடுப்பார். இதற்கு முன்பு அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37 பேர், பா.ம.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என 38 பேரும் காவிரி நதி நீர் பிரச்சினை ஏற்பட்டபோது 23 நாட்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததால் நாடாளுமன்ற அவையை ஒத்திவைத்தார்கள். அந்த அளவுக்கு தமிழக விவசாயிகளின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்த கட்சி அ.தி.மு.க.. ஆனால் தி.மு.க.வினர் என்ன செய்தார்கள். காவிரி நதிநீர் பிரச்சினை வந்தபோது, காவிரி நதிநீர் இறுதிதீர்ப்பை வெளியிட விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தார்கள். ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க. என்ன செய்தது. காங்கிரஸ்–தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதுவும் செய்யவில்லையே. கர்நாடகா, கேரளா தரப்பில் இருந்து நீதிமன்றத்துக்கு சென்றாலும் ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு சென்று போராடி காவிரி நதிநீர் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்து விவசாயிகளுக்காக காவிரிநீரை பெற்றுத்தந்தார். மக்களுக்காக குரல் கொடுப்பது அ.தி.மு.க.தான்.

கிராமம் முதல் நகரம் வரை அனைவரின் தேவையை நிறைவேற்றும் அரசு ஜெயலலிதா அரசு. ஒரே கட்சி அ.தி.மு.க. கட்சி தான். ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் விடுபடாமல் நிறைவேற்றி வருகிறோம். தைப்பொங்கல் தினத்தன்று அனைத்து குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்கியது அ.தி.மு.க. அரசு. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. சட்டம், ஒழுங்கை பேணிக்காப்பதில் தமிழகம் முதலிடம், வேளாண் உற்பத்தியில் அதிக உணவு தானிய உற்பத்தியில் முதன்மை பெற்று விருது பெற்றுள்ளோம். தடையில்லா மின்சாரம் வழங்கி, அதிகப்படியான மின் உற்பத்தியை செய்து விருது பெற்றது அ.தி.மு.க. அரசு. இது மக்களுக்கான ஆட்சி. மக்கள் தான் முதல்–அமைச்சர். இங்கு வந்துள்ள அனைவரும் முதல்–அமைச்சர்கள் தான். மக்களுக்கு சேவை செய்கிறோம்.

மடத்துக்குளத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. மடத்துக்குளத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் உருவாக்கி செயல்பட உள்ளது. அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகள் தூர்வாரப்பட்டு விவசாயிகளுக்கு வண்டல் மண் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சாலை, மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு நிலையான ஆட்சி அமைய திறமையான பிரதமரான மோடி மீண்டும் பிரதமராக நீங்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

நாடு பாதுகாப்பாக இருந்தால் தான் மக்கள் வளமோடு, செழிப்போடு, நலமுடன் வாழ முடியும். வலிமையான பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். அண்மையில் புலவாமாவில் துணை ராணுவ வீரர்கள் பலியான சோக சம்பவம் நடந்து விட்டது. இந்தநிலை உருவாகி விடக்கூடாது என்பதற்காக இந்தியாவை ஆளும் தகுதியான பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும். மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வரும்போது தமிழகத்துக்கு தேவையான நிதிகள் கிடைக்கும். வளர்ச்சி திட்டங்கள் நமக்கு கிடைக்கும். உடுமலை பகுதி வேளாண் தொழில் நிறைந்த பகுதியாகும். வேளாண்பெருமக்கள், விவசாய தொழிலாளர்களுக்காக இந்த பகுதிகளில் உள்ள குளங்கள் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டு நீர் நிலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக குடிமங்கலம் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.54 கோடியில் நிறைவேற்றப்பட்டு 1 லட்சத்து 48 ஆயிரம் மக்கள் பயன்பெறுகிறார்கள். கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக 5, 286 பயனாளிகளுக்கு விலையில்லா செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், கறவை பசுக்கள், நாட்டுக்கோழி ரூ.6½ கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. உடுமலை அரசு மருத்துவமனையில் 100 படுக்கை கொண்ட கட்டிடம் ரூ.5¼ கோடியில் கட்டப்பட்டு வருகிறது. மக்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கும் வகையில் சி.டி.ஸ்கேன் வசதி அரசு மருத்துவமனையில் புதிதாக ரூ.1¾ கோடியில் அமைக்கப்படுகிறது. உடுமலை நகராட்சியில் ரூ.56 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் நடந்து வருகிறது. நகராட்சி அலுவலக கட்டிடம் ரூ.3½ கோடியில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக ரூ.62 கோடியில் 2,075 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது. புக்குளம் கிராமத்தில் 350 குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.26¼ கோடியில் கட்டப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை மூலமாக அணைகள், குளங்கள் தூர்வார ரூ.6½ கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உடுமலை தொகுதியில் மட்டும் ரூ.537 கோடிக்கு மக்கள் பணி செய்யப்பட்டுள்ளது. இன்னும் மக்களுக்கு செய்யப்போகிறோம்.

தனியார் மருத்துவமனையில் காப்பீட்டு திட்டத்தில் ரூ.2 லட்சத்துக்கு சிகிச்சை பெறுவது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு கட்டணமில்லாமல் கொடுக்கப்படுகிறது. தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறோம். இந்தியாவிலேயே அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுக்கும் அரசு ஜெயலலிதா அரசு. ஆனைமலையாறு–நல்லாறு திட்டம் நிறைவேற்றித்தரப்படும். ரேக்ளா பந்தயம் தடையின்றி நடத்த இந்த அரசு துணை நிற்கும்.

தி.மு.க.வினரின் அராஜகம் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. எங்குபார்த்தாலும் மு.க.ஸ்டாலின் பொய்யாக பேசி வருகிறார். தி.மு.க. நிர்வாகி ஒருவர் அழகு நிலையத்தில் புகுந்து பெண்ணை அடித்து உதைக்கிறார். அந்த பெண் கதறும் காட்சியை தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள். கடந்த வாரம் ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணியை தி.மு.க. செயற்குழு உறுப்பினர் பலாத்காரம் செய்ய முற்பட்டதாக அந்த பெண் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஓட்டலுக்கு போனால் தி.மு.க.வினர் பிரியாணி, புரோட்டா சாப்பிட்டு விட்டு ஓட்டல் உரிமையாளரின் மூக்கிலேயே குத்துகிறார்கள். அடுத்த நாள் மு.க.ஸ்டாலின் அங்கு சென்று கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். ஒரு தலைவர் போய் கட்டப்பஞ்சாயத்து செய்தால் அந்த கட்சி விளங்குமா?. ஒரு தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி. தலைவர் அந்த செயலை கண்டித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க வைத்தால் நல்ல தலைவர். ஆனால் தலைவர் அப்படி இருக்கிறாரா?. எந்த அதிகாரமும் இல்லாமல் எதிர்க்கட்சியாக இருக்கும்போதே தி.மு.க.வினர் இப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், இவர்கள் ஆட்சியில் இருந்தால் நாட்டு மக்களை நிம்மதியாக வாழ விடுவார்களா?. கடைக்காரர்கள் தான் நிம்மதியாக வியாபாரம் செய்ய முடியுமா?. மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். நாடு வளம்பெற, சட்டம், ஒழுங்கு சிறப்பாக பேணிக்காத்திட அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கிட அ.தி.மு.க. அரசுக்கு நல்லாதரவு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story