தி.மு.க. ஆட்சியில் மதுரைக்குள் நுழைய முடியாத மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபயணம் செல்கிறார் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


தி.மு.க. ஆட்சியில் மதுரைக்குள் நுழைய முடியாத மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபயணம் செல்கிறார் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 8 April 2019 4:45 AM IST (Updated: 8 April 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சியில் மதுரைக்குள் நுழைய முடியாத மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ஆட்சியில் நடைபயணம் செல்கிறார், என்று திண்டுக்கல் பிரசாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் ஜோதிமுத்து போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:–

மத்தியில் நிலையான ஆட்சி அமைவதற்கு, திறமையான பிரதமர் வேண்டும். இதற்கு திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தி.மு.க., 15 ஆண்டுகள் மத்திய அரசில் இடம்பெற்று இருந்தது. அந்த 15 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தார்கள். எதை நிறைவேற்றினார்கள், எவ்வளவு நிதியை தமிழ்நாட்டுக்கு பெற்று தந்தார்கள் என்பது தான் எங்களின் கேள்வி.

மத்தியில் அதிகாரத்தில் இருந்த போதே எதையும் செய்யாதவர்கள், இனிமேல் என்ன செய்வார்கள். அவர்களால் எதையும் செய்ய முடியாது. ஏனெனில், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம் ஆகும். ஆனால், வாக்களித்த மக்களுக்கு தேர்தல் நேரத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

ஆனால், 2011 சட்டமன்ற தேர்தலில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஜெயலலிதா நிறைவேற்றினார். எந்த நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறதோ? அந்த நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறும். அந்த அடிப்படையில் ஜெயலலிதா தொலைநோக்கு சிந்தனையோடு, திட்டங்களை செயல்படுத்தினார். ஏராளமான கல்லூரிகளை திறந்து கல்வியில் புரட்சியை ஏற்படுத்தினார்.

இதனால் பட்டப்படிப்பு படிப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஜெயலலிதா வழியில் தொடர்ந்து அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது. நீர்மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். கோதாவரி, காவிரி இணைப்பு திட்டம் நிறைவேறியதும் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து ஏரிகளும், குளங்களும் நிரம்பிவிடும். அதன்மூலம் விவசாயம் செழிக்கும்.

இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. ஆனால், மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு குறித்து பேசுகிறார். மதுரையில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற போது, சுதந்திரமாக நடைபயணம் சென்றார். 2006 முதல் 2011–ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. அந்த 5 ஆண்டுகளும் மு.க.ஸ்டாலினால் மதுரைக்குள் நுழைய முடியவில்லை. தி.மு.க. ஆட்சியில், துணை முதல்–அமைச்சராக இருந்த அவர் மதுரையில் நடைபயணம் மேற்கொண்டாரா?

தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது கூட, அவரால் மதுரைக்கு வரமுடியவில்லை. ஆனால், எங்களுடைய ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் சுதந்திரமாக நடைபயணம் செல்கிறார் என்றால் சட்டம்–ஒழுங்குக்கு அதுவே சான்று. சட்டம்–ஒழுங்கு சரியில்லை என்று கூறும் மு.க.ஸ்டாலினே அதற்கு சான்று. மதுரையில் நீங்கள் நடைபயணம் செய்தது, எங்கள் அரசு வழங்கும் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்பது அ.தி.மு.க. அரசு. ஆனால், சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் தான் பாதுகாப்பாக இருப்பது போன்ற போலியான தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். ரம்ஜான் பண்டிகை நோன்பு கஞ்சிக்காக 4,900 டன் இலவச அரிசி, ஹாஜிக்களுக்கு மதிப்பூதியமாக ரூ.20 ஆயிரம், நாகூர் தர்கா சந்தனகூடு திருவிழாவுக்கு 40 கிலோ சந்தனக்கட்டைகள், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள ரூ.6 கோடி வழங்கியது அ.தி.மு.க. அரசு.

இது தவிர முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தோம். மேலும் நாங்கள் ஆதரவு அளிக்காததால், அந்த சட்டம் நிறைவேறாமல் போனது. இஸ்லாமியர்களுக்கு யார்? பக்கபலமாக இருக்கிறார்கள் என்று எண்ணி பார்க்க வேண்டும். கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்வதற்கும் உதவி செய்யப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி அனைவரையும் நேசிப்பது அ.தி.மு.க. மற்றும் எங்களின் கூட்டணி ஆகும். எனவே, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாகவும், அரணாகவும் இருக்கும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும் போதே மக்களை தொந்தரவு செய்கிறார்கள். இவர்களிடம் அதிகாரம் இருந்தால், நிம்மதியாக வாழ முடியுமா? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். இந்து வன்னியர்களை போன்று, கிறிஸ்தவ வன்னியர்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும், கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து ஒட்டன்சத்திரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

நாடாளுமன்ற தேர்தல் பற்றி வருவது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு. கொடநாடு கொலை வழக்கில் நான் சம்பந்தப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அந்த விவகாரத்தை முதலில் கண்டுபிடித்ததே அ.தி.மு.க. அரசு தான். அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைத்ததே நாங்கள் தான். ஆனால், மு.க.ஸ்டாலின் கற்பனையாக திரைக்கதை, வசனத்தை தயார்படுத்தி, கூலிப்படையை சேர்ந்த 2 பேரிடம் பணத்தை கொடுத்து தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டார்.

அது தவறானது, என்று வழக்கு தொடர்ந்தோம். 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. வக்கீல் ஆஜராகிறார். தி.மு.க. நிர்வாகி ஜாமீன் கேட்டு மனு செய்கிறார். அந்த கூலிப்படையினர் கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்கள் மீது பாலியல் குற்றம், போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல், திருட்டு, கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்களை தி.மு.க. நிர்வாகிகள் மூலம் மு.க.ஸ்டாலின் ஜாமீனில் எடுக்க முயற்சி செய்கிறார் என்றால் அவரை கூலிப்படை தலைவர் என்று தானே சொல்ல வேண்டும்.

எனவே மக்களிடம் உங்கள் பொய் எடுபடாது. ரியல் எஸ்டேட் அதிபர் சாதிக் பாட்சா, முன்னாள் மத்திய மந்திரி ராசா மற்றும் மு.க.ஸ்டாலினுக்கும் நெருக்கமானவர். 2ஜி விவகாரத்தில் கொள்ளையடித்த பணத்தை அவரிடம் கொடுத்து வைத்ததாக தகவல். அதன் பேரில் சாதிக்பாட்சா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. அப்போது மர்மமான முறையில் சாதிக்பாட்சா இறந்ததாக கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாதிக்பாட்சாவின் மனைவி ரேணுகாபானு, பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார். அதில் கூடா நட்பு கேடாய் முடியும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவர் சென்ற காரை தாக்கி கொலை முயற்சி செய்ததாக ரேணுகாபானு புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுத்து உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். சாதிக்பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளார் என ரேணுகாபானு தற்போது கூறுகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல் பழனியில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், முதல்–அமைச்சர் பேசியதாவது:–

தி.மு.க. கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். அதில் உள்ள கட்சிகள் எல்லாமே தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணியில் இருக்கும். தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. அங்கு மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரின் கைகளில் அதிகாரம் உள்ளது. மேலும் குறிப்பிட்ட நிர்வாகிகளின் குடும்பத்தினர் மட்டுமே ஆட்சி, அதிகாரத்துக்கு வர முடியும். ஆனால், அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டனும் பதவிக்கு வரமுடியும்.

அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து, காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை மீட்டனர். காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், தமிழகத்துக்கு ஒன்றும் செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியால் மட்டுமே தமிழக மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற முடியும். தி.மு.க. சாத்தியம் இல்லாததை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது. தி.மு.க.வினர் ஒழுங்காக இருந்தால் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

திருப்பதியை போலவே பழனியை மாற்ற தேவையான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.58 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும். பொதுப்பணித்துறை மூலம் ரூ.52 கோடியில் வையாபுரிகுளம், சிறுநாயக்கன்குளம் உள்ளிட்ட குளங்கள் தூர்வாரப்படும். குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும். பழனி–தாராபுரம் சாலையில் ரெயில்வே மேம்பாலம், கீரனூர் மற்றும் தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்.

இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், முன்னாள் மேயர் மருதராஜ், பரமசிவம் எம்.எல்.ஏ. உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story