எங்களை பற்றி பேச அருகதை கிடையாது: கண்ணுக்கு தெரியாத காற்றிலேயே ஊழல் செய்த கட்சி தி.மு.க. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கு
எங்களை பற்றி பேச அருகதை இல்லை என்றும், கண்ணுக்கு தெரியாத காற்றிலேயே ஊழல் செய்த கட்சி தி.மு.க. என்றும் வேடசந்தூர் பிரசார கூட்டத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
வேடசந்தூர்,
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மு.தம்பித்துரையை ஆதரித்து, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேடசந்தூரில் வாக்கு சேகரித்தார். திறந்தவேனில் நின்றபடி அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:–
தமிழகத்துக்கு தேவையானதை அறிந்து ஆளும்கட்சியான நாங்கள் செய்கிறோம். ஆனால் மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சர் போலவும், தி.மு.க. ஆளுங்கட்சியை போலவும் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார். ஆனால், தமிழகத்துக்கு அதை செய்வேன், இதை செய்வேன் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். எப்படி அவரால் செய்ய முடியும். தி.மு.க. தேர்தல் அறிக்கை எல்லாமே பொய் அறிக்கை தான்.
ஏற்கனவே தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ஏழை–எளிய மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கினார்களா?. கடந்த 15 ஆண்டுகளாக மத்தியில் கூட்டணியில் இருந்தீர்கள். அப்போது தமிழகத்துக்கு எதுவுமே செய்யவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்கள் நலம் பெற்றது தான் மிச்சம். கண்ணுக்கு தெரியாத காற்றிலேயே ஊழல் செய்த கட்சி தி.மு.க. தான். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட தவறிய தி.மு.க.வுக்கு எங்களை பற்றி பேச அருகதை இல்லை.
கரூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அதை செய்வேன், இதை செய்வேன் என்கிறார். மத்திய நிதிமந்திரியாக ப.சிதம்பரம் இருந்தார். அவர் நினைத்து இருந்தால் நீர் மேலாண்மை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி நிறைய அணைகளை கட்டியிருக்கலாம். ஆனால், ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. அந்த கட்சியை சேர்ந்தவர் தான், இங்கே வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரே செய்யவில்லை. இவரால் செய்ய முடியுமா?.
தேர்தல் முடிந்தவுடன் ஏழை–எளிய மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் தி.மு.க.வினர் கோர்ட்டுக்கு சென்று விட்டனர். ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கலாமா?. இந்தியாவிலேயே ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சி தி.மு.க. தான். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் தி.மு.க. வினர் தான் பெண்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். தி.மு.க.வினர் ஒழுங்காக இருந்தால் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.
சென்னையில் ரூ.2 ஆயிரம் கோடியில் உணவு பூங்கா, சேலம்–கள்ளக்குறிச்சி இடையே கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மேலும் தடுப்பணைகள் கட்ட ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி உபரி நீர் வீணாகாமல் சேமிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.283 கோடி மதிப்பில் 14,500 பணிகள் நடைபெறுகின்றன. நலத்திட்ட பணிகள் தொடர அ.தி.மு.க. வேட்பாளர் தம்பித்துரைக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.