மேகதாதுவில் அணை கட்டுவதற்கு திட்டம் தீட்டிக் கொடுத்ததே மத்திய அரசு தான் - வைகோ பேச்சு
மேகதாது அணை கட்டுவதற்கு திட்டம் தீட்டிக் கொடுத்ததே மத்திய அரசு தான் என்று தேனியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
தேனி,
தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து தேனியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
தேனியில் நடந்த விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பேரதிர்ச்சியாக உள்ளது. அதில் தி.மு.க.வை சேர்ந்தவர்களும் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.
நடைபெற உள்ள தேர்தல் இந்தியாவில் மதசார்பின்மை நிலைக்குமா? ஜனநாயகம் நிலைக்குமா? அல்லது ஜனநாயகத்துக்கு அடித்தளமான மதசார்பின்னை தகர்க்கப்படுமா? என்பதை உறுதி செய்யும் தேர்தல் ஆகும். மகாத்மா காந்தியை அகிலமே போற்றியது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு காந்தியின் உருவப்படத்தை இந்து மகா சபையை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை பிரதமர் கண்டிக்கவில்லை. அவர்களை கைது செய்யக்கோரி உத்தரபிரதேச முதல்–மந்திரிக்கு பிரதமர் உத்தரவிடவில்லை.
கஜா புயலில் தமிழகம் பாதிக்கப்பட்ட போதும், மக்கள் உயிரிழந்த போதும் பிரதமர் இரங்கல் தெரிவிக்கவில்லை. தினமும் டுவிட்டரில் ஏராளமான பதிவுகள் போடும் பிரதமர், கஜா புயல் பாதிப்புக்கு ஒரு இரங்கல் பதிவு கூட போடாதது ஏன்?. புயல் பாதிப்புக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. தமிழக அரசு ரூ.15 கோடி நிவாரணத்தை கேட்டது. ஆனால், மத்திய அரசு கேட்ட நிவாரணம் வழங்கவில்லை.
கேரளாவில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்தது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு திட்டம் தீட்டிக் கொடுத்ததே மத்திய அரசு தான். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும். அது போல தமிழகத்தில் அ.தி.முக. ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக வைகோ ஆண்டிப்பட்டியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
ராணுவத்தை பலம் வாய்ந்ததாக வைத்திருப்பதாக கூறும் மோடி, ரூ.566 கோடிக்கு வாங்க வேண்டிய ரபேல் போர் விமானங்களை, அரசு நிறுவனங்களை தவிர்த்து விட்டு அம்பானி நிறுவனத்துடன் சேர்ந்து ரூ.1,670 கோடிக்கு வாங்க வேண்டியதன் அவசியம் என்ன?. தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை மீட்பு போராட்டத்திற்கு நடை பயணம் சென்றேன். அதன் பின் நியூட்ரினோ ஆய்வு திட்ட எதிர்ப்புக்கு நடைபயணம் மேற்கொண்டேன். நியூட்ரினோ ஆய்வு மையத்தினால் முல்லைப்பெரியாறு, இடுக்கி அணைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படையும். நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மற்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்த முனைப்பு காட்டுவது ஏன்?.
தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளுக்குப்பின், மத்தியில் ராகுல்காந்தி பிரதமராகவும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சராகவும் பதவி ஏற்பார்கள். இவ்வாறு வைகோ பேசினார்.