தேனி மாவட்டத்தில் தபால் வாக்குப்பதிவில் குளறுபடி தேர்தல் பணிச்சான்று வழங்காததால் அரசு ஊழியர்கள் வாக்குவாதம்
தேனி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தபால் வாக்குப்பதிவு செய்வதில் குளறுபடி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் பணிச்சான்று வழங்காததால் அரசு ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்கு வழங்கப்படுகிறது. இதில், தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு செய்வதற்கு அரசு ஊழியர்கள், போலீசாருக்கு தேர்தல் பணிச்சான்று வழங்கப்படும். இந்த சான்றை பயன்படுத்தி தேர்தல் நாளில் தாங்கள் பணியாற்றும் வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிக்கலாம்.
அதேபோல், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு உள்ளவர்கள், வேறு சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற வேண்டியது உள்ளதால் அவர்களுக்கு சட்டமன்ற தொகுதிக்கு வாக்களிக்க தபால் வாக்கு படிவம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. மாவட்டத்தில் தேனி, முத்துத்தேவன்பட்டி, கம்பம், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்த இடங்களில் தபால் வாக்குகள் பெறப்பட்டன.
அந்த வகையில் தேனி மையத்தில் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு 388 வாக்குகளும், பெரியகுளம் தொகுதிக்கு 453 வாக்குகளும் பதிவாகின. முத்துத்தேவன்பட்டியில் மையத்தில் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு 209 வாக்குகளும், பெரியகுளம் தொகுதிக்கு 388 வாக்குகளும் பதிவாகின. கம்பம் மையத்தில் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு 114 வாக்குகளும், பெரியகுளம் தொகுதிக்கு 140 வாக்குகளும், ஆண்டிப்பட்டி மையத்தில் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு 395 வாக்குகளும், பெரியகுளம் தொகுதிக்கு 158 வாக்குகளும் பதிவாகின. ஆண்டிப்பட்டியில் அமைக்கப்பட்டு இருந்த மற்றொரு மையத்தில் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு 17 வாக்குகளும், பெரியகுளம் தொகுதிக்கு 91 வாக்குகளும் பதிவாகின.
மொத்தத்தில் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு 1,123 வாக்குகளும், பெரியகுளம் தொகுதிக்கு 1,230 வாக்குகளும் பதிவாகின.
தேனியில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தில் வாக்குப்பதிவு நடந்தபோது, 13ஏ படிவம் இல்லை என்று கூறி சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அப்போது தபால் வாக்கு செலுத்த வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்பட பலரும் காத்திருந்தனர். பின்னர், படிவம் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. முத்துத்தேவன்பட்டியில் நடந்த மையத்தில் தபால் வாக்குக்கு அரசு ஊழியர்களுக்கு உரிய படிவம் வழங்க தாமதம் ஏற்பட்டது. பலருக்கும் படிவம் வரவில்லை என்று கூறியதாக தெரிகிறது. மேலும், தேர்தல் பணிச்சான்றும் தயாராகி வரவில்லை என்று கூறப்பட்டது. இதனால், அங்கு இருந்த தேர்தல் அதிகாரிகளிடம், அரசு ஊழியர்கள் வாக்குவாதம் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவும் அங்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது படிவங்கள் தயார் செய்து வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இருப்பினும், படிவம் கிடைக்காத விரக்தியில் அரசு ஊழியர்கள் பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். அதேபோன்று பிற மையங்களிலும் தபால் வாக்குப்பதிவில் மந்தமான சூழல் ஏற்பட்டது. வாக்கு செலுத்த வந்து இருந்தவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தேர்தல் பணிச்சான்றும் பலருக்கும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசு ஊழியர்களிடம் கேட்டபோது, ‘ மாவட்டத்தில் தபால் வாக்குப்பதிவில் முதல் நாளிலேயே குளறுபடி நடந்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வரவில்லை. தேர்தல் பணிச்சான்றும் தயார் செய்து கொண்டு வரவில்லை’ என்றனர்.