நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளை நம்பி ஏமாறாதீர்கள் நாகர்கோவிலில் டி.டி.வி.தினகரன் பிரசாரம்


நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளை நம்பி ஏமாறாதீர்கள் நாகர்கோவிலில் டி.டி.வி.தினகரன் பிரசாரம்
x
தினத்தந்தி 7 April 2019 11:00 PM GMT (Updated: 2019-04-08T02:25:27+05:30)

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று நாகர்கோவிலில் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்து பேசினார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து நாகர்கோவிலில் நேற்று பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில துணைபொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து பேசியதாவது:–

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18–ந் தேதி நடக்க இருக்கிறது. அதனுடன் தமிழகத்தில் ஒரு மினி சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது. 18 தொகுதிகளில் சட்டசபை இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. பிரதமர் மோடியும், மோடியை டாடி என சொல்கின்ற இந்த தமிழகத்தின் அடிமைகளான ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கம்பெனியும் கூட்டணி வைத்துள்ளார்கள். அதேபோல மற்றொரு கூட்டணி, அது மதசார்பற்ற கூட்டணி. அந்த கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை தி.மு.க. வகிக்கிறது. ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவோம், அடுத்த பிரதமர் ராகுல்காந்தி என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சொல்கிறார்.

தமிழகத்தை புறக்கணித்த மோடி சார்ந்த பா.ஜனதாவுடன் வாழ்நாளில் கூட்டணி கிடையாது என்று அ.ம.மு.க. அறிவித்திருக்கிறது. இதைப்போல ஸ்டாலின் அறிவிக்கத்தயாரா? என்று இந்த குமரி மாவட்டத்தில் இருந்து கேட்கிறேன். பா.ஜனதாவுடன் எந்த காலத்திலும் ஒட்டோ, உறவோ கிடையாது, எந்த காலத்திலும் கூட்டணி வைக்கமாட்டேன் என அவர் சொல்வாரா?. சொல்லமாட்டார். வாய்ப்பு கிடைத்தால், பா.ஜனதாவில் மந்திரி பதவி கிடைத்தால் அங்கும் அவர் சென்று விடுவார். ஆட்சி, அதிகாரத்தை நம்பித்தான் அவர்கள் செல்கிறார்கள். அதனால்தான் தி.மு.க. கூட்டணியை, குறிப்பாக தேசிய கட்சிகளை நம்பி ஏமாறவேண்டாம்.

இந்தமுறையாவது தமிழக மக்களின் உரிமைகளுக்காக, தமிழர்கள் தலைநிமிர்வதற்காக, பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாக, தமிழ்நாட்டில் வாழ்கின்ற அனைத்து தரப்பு மக்கள், எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள கட்சி, பாதுகாப்பான இயக்கம் அ.ம.மு.க. என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சாதி, மதத்தை கடந்து மக்களின் நலனில் அக்கறை எடுத்து உண்மையாக உழைக்கக்கூடியவர்கள் யார்? தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் யார்? அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தும் கட்சி எது? 37 தொகுதிகளிலும் வெற்றிபெறபோகும் கட்சி எது? என்பதை எண்ணி நீங்கள் முடிவு செய்யுங்கள்.

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்ற அ.ம.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இந்திய பிரதமரை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். சாதி, மதம், சிறுபான்மை பெரும்பான்மையை கடந்து நாங்கள் நல்ல வேட்பாளரான லெட்சுமணனை நிறுத்தியுள்ளோம். உங்களை சிலர் குழப்புவார்கள். நீங்கள் குழப்பம் அடையாமல், தேசிய கட்சிகளைக் கண்டு ஏமாறாமல் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் பரிசு பெட்டகம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

குமரி மாவட்டத்தில் பொறியியல் பட்டதாரிகள் அதிகம் இருக்கிற காரணத்தால் தொழில்நுட்ப பூங்கா அமைத்து தரவேண்டும், தேங்காய் மற்றும் ரப்பர் விவசாயத்தை நம்பி இருக்கும் விவசாயிகளுக்கு விலை குறைவு காலகட்டத்தில் ஆதரவு விலை வாங்கித்தரவேண்டும், இயற்கை பேரிடர் நேரங்களில் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேற்றித்தரப்படும். நீரோடி முதல் சின்னமுட்டம் வரையிலான 68 கி.மீ. கடற்கரை கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் வசிக்கும் மக்களின் அச்ச உணர்வுகளை போக்கும் வகையில் சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுக திட்டத்தை தேர்தல் அறிக்கையிலேயே நாங்கள் எதிர்க்கிறோம். இந்த துறைமுகத்தை வரவிடாமல் தடுக்க உங்களுடன் சேர்ந்து நாங்களும் போராடுவோம்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார்.

கூட்டத்தில் வேட்பாளர் லட்சுமணன், மாவட்ட செயலாளர்கள் கே.டி.பச்சைமால், ஜெங்கின்ஸ் மற்றும் நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story