வாகன சோதனையில் தொழில் அதிபர், வியாபாரியிடம் ரூ.1¼ லட்சம்-வெளிநாட்டு பணம் பறிமுதல்


வாகன சோதனையில் தொழில் அதிபர், வியாபாரியிடம் ரூ.1¼ லட்சம்-வெளிநாட்டு பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 7 April 2019 11:00 PM GMT (Updated: 2019-04-08T02:46:07+05:30)

திருச்சியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் தொழில் அதிபர், வியாபாரியிடம் இருந்து ரூ.1¼ லட்சம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மலைக்கோட்டை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை அதிகாரிகள் திருச்சியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் திருச்சி உடையான்பட்டி ரெயில்வேகேட் அருகே நேற்று மாலை மண்டல துணை வட்டாட்சியர் தாமஸ்ஜஸ்டின் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் ஓலையூரில் இருந்து வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்தகாரில் தொழில் அதிபர் முகமது அபுபக்கர் என்பவர் இருந்தார். அவரிடம் இருந்த ரூ.68 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 702 சவுதி அரேபியா நாட்டு ரியால் ஆகியவற்றிற்கு எந்த வித ஆவணத்தையும் சமர்ப்பிக்காததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருச்சி கிழக்கு தாசில்தார் சண்முகவேலனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் நேற்று காலை அரியமங்கலம் பழைய பால்பண்ணை ரவுண்டானா அருகில் பறக்கும் படை தாசில்தார் மோகனா தலைமையில் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த பூ வியாபாரி பொன்னுசாமி என்பவர் இருந்தார். அவர் வைத்திருந்த ரூ.57 ஆயிரத்து 100 க்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.

இந்த பணத்தையும் திருச்சி கிழக்கு தாசில்தார் சண்முகவேலனிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் இவை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story