சிவகங்கை தொகுதியில் 7 முறை வெற்றி பெற்ற ப.சிதம்பரம் 100 பேருக்காவது வேலை பெற்று தந்தாரா? எச்.ராஜா கேள்வி


சிவகங்கை தொகுதியில் 7 முறை வெற்றி பெற்ற ப.சிதம்பரம் 100 பேருக்காவது வேலை பெற்று தந்தாரா? எச்.ராஜா கேள்வி
x
தினத்தந்தி 7 April 2019 10:45 PM GMT (Updated: 7 April 2019 9:51 PM GMT)

சிவகங்கை தொகுதியில் 7 முறை வெற்றி பெற்ற ப.சிதம்பரம் 100 பேருக்காவது வேலை பெற்று தந்தாரா? என்று பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பஸ் நிலையத்தில் பா.ஜனதா கட்சி வேட்பாளர் எச்.ராஜா ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:- கடந்த 7 முறை சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ப.சிதம்பரம் இந்த தொகுதிக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை. அவர் 100 இளைஞர்களுக்காவது வேலை வாய்ப்பு கொடுத்தாரா?. அவர் 7 முறை வெற்றி பெற்றதற்கு முன்பு இங்கு பல்வேறு தொழிற்சாலை மற்றும் நூற்பாலைகள் இருந்தன.

இவர் வெற்றி பெற்று வந்த பின்பு அந்த தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலைகள் வளர்ச்சி பெறாமல் மூடப்பட்டு விட்டன. அவற்றை பாதுகாக்க ப.சிதம்பரம் தவறிவிட்டார். இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். தற்போது மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தல் என்ற இடத்தில் உள்ள நூற்பாலை கம்யூனிஸ்டு கட்சியினரால் மூடப்பட்டது. தற்போது இந்த கட்சியுடன் தான் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது.

ஒரு தனியார் தொலைக் காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜனதா நாடு முழுவதும் 313 தொகுதிகளையும், தமிழகத்தில் 33 இடங்களையும் பிடிக்கும் என்று கூறியுள்ளது. மீண்டும் இந்தியாவில் பா.ஜனதா ஆட்சி மோடி தலைமையில் அமையும். தற்போது மோடி தமிழ்நாட்டிற்கு பிரசாரம் செய்ய வர உள்ளதால் மீதமுள்ள 7 இடங்களையும் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் தான் 40-க்கு 40 இடத்தை பிடிப்போம் என்று கூறியவர்கள், தற்போது ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாமல் போவார்கள்.

நாடு முழுவதும் 37 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, அதில் 17 கோடி பெண்களுக்கு டெபாசிட் தொகை இல்லாமல் புதிய வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் 37லட்சம் தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இது மோடி அரசு சாதனையாகும். அதேபோல் கியாஸ் மானியம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

தற்போது தமிழக அரசு அறிவித்த ரூ.2ஆயிரம் பணத்தை நிறுத்தியது யார் என்பது மக்களுக்கு தெரியும். இந்த ரூ.2 ஆயிரத்தை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கலாம் என்று நீதிமன்றமே தெரிவித்துள்ளது. அதேபோல் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கியதை தி.மு.க.வினர் நிறுத்துவதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அதுவும் பொதுமக்களுக்கு வழங் கப்பட்டது.

எனவே இந்த பா.ஜனதா கூட்டணி நாடு முழுவதும் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குணசேகரன், நகர செயலாளர் விஜிபோஸ், பா.ஜ.க. நிர்வாகி சங்கரசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story