“தமிழகத்தில் காங்கிரஸ் பின் வாசல் வழியாக நுழையப் பார்க்கிறது” மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு


“தமிழகத்தில் காங்கிரஸ் பின் வாசல் வழியாக நுழையப் பார்க்கிறது” மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 April 2019 11:15 PM GMT (Updated: 7 April 2019 10:29 PM GMT)

தமிழகத்தில் காங்கிரஸ் பின்வாசல் வழியாக நுழைய பார்க்கிறது. ஆனால் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் மீண்டும் அமையும் என்று மதுரை கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கூறினார்.

மதுரை,

மதுரை ரிங்ரோடு சிவகங்கை சந்திப்பு அருகில் பா.ஜ.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தனி விமானம் மூலம் நேற்று மாலை 6.30 மணி அளவில் மதுரை விமானநிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து அவர் பிரசார கூட்ட மேடைக்கு காரில் வந்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

கடந்த தேர்தலின் போது வாஜ்பாய். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இருந்தார்கள். ஆனால் அந்த 3 பேரும் இல்லாத வித்தியாசமான தேர்தல் இது. தமிழ்மொழியில் இயற்றப்பட்டுள்ள திருக்குறள், உலக அளவில் அனைத்து தரப்பினரையும் ஈர்த்துள்ளது. நம் நாட்டின் கலாசாரம், பழமையான பாரம்பரியத்தையும் திருக்குறள் ஞாபகப்படுத்துகிறது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டை சீரழித்தனர். அந்த வேலையை தற்போது காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகின்றனர். அவர்கள் நம் நாட்டை 55 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் பல ஆண்டுகளுக்கு முன்பே துரத்தியடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அவர்கள் பின்வாசல் வழியாக நுழைய பார்க்கிறார்கள். காங்கிரஸ் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. நல்ல தலைமையில்லாத காங்கிரஸ் மூழ்கும் கப்பலை போன்றது. இதெல்லாம் தெரிந்தும் அந்த கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. இது ஏன் என்று தெரியவில்லை.

கருணாநிதி அரசை 2 முறையும், எம்.ஜி.ஆரின் அரசை ஒருமுறையும் என 3 தடவை தமிழகத்தில் ஆட்சியை காங்கிரஸ் கலைத்தது. தற்போது அந்த கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. காங்கிரசால் தி.மு.க.வுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது நடக்காது. கடந்த 5 ஆண்டு கால மோடி ஆட்சியை சர்வதேச அளவில் பெருமையுடன் பேசுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியின்போது டாப் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் இருந்தது.

மோடி ஆட்சியில் 6-வது இடத்துக்கு முன்னேறி, தற்போது 5-வது இடத்தை பிடித்துள்ளது. 2020-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகள் பட்டியலில் நம் நாடு 3-வது இடத்தை பிடிக்கும். அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து இந்தியா என ஆகிவிடும். அதேபோல பணவீக்கம் 0.5 சதவீதமாக குறைந்துள்ளது. மோடி அரசு 1 கோடியே 35 லட்சம் வீடுகளை ஏழைகளுக்கு கட்டி தந்துள்ளது. 98 சதவீத வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.

7 கோடி பேருக்கு சமையல் எரிவாயு இணைப்பு தரப்பட்டு உள்ளது. 2022-க்குள் அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் சமையல் எரிவாயு திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும். மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் மீண்டும் அமையும்.

காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்த மந்திரிகள் அனைவரும் ஜெயிலில் உள்ளனர் அல்லது பெயிலில் (ஜாமீனில்) உள்ளனர். ஆனால் பா.ஜ.க. மந்திரிகள் எவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியாது. நாடு வலிமையுடன் இருக்கிறது. புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்களின் முகாம்கள் 15 நாட்களில் தகர்க்கப்பட்டது. தீவிரவாத தாக்குதலில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். கவுரவம் உள்ளவர்கள் உடல்களை எண்ணிப்பார்க்கமாட்டார்கள். இந்த நேரத்தில் அபிநந்தனை நினைத்து பார்க்க வேண்டும். எப்.16 என்ற பாகிஸ்தான் விமானத்தை நம் வீரர்கள் சுட்டு வீழ்த்தி உள்ளனர். இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் மறுத்தற்கு அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகன் கண்டனம் தெரிவித்தது.

செயற்கைகோள்களை தகர்க்கும் ஏவுகணைகளை தயாரிக்க அனுமதி அளித்தது மோடி அரசு. இதன் மூலம் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக அந்த ஏவுகணைகளை தயாரித்து சுய பாதுகாப்புக்காக வைத்துள்ளோம். அந்த ஏவுகணை எந்த நாட்டையும் தாக்குவதற்கு அல்ல. நம்மை எந்த நாடு தாக்கினாலும் அடுத்த 3 நிமிடத்தில் பதிலடி கொடுக்கப்படும். உத்தரபிரதேச மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.

மதுரையில் நசிந்து வரும் கைத்தறி நெசவு தொழிலை பாதுகாக்க பாடுபடுவோம். மதுரையில் வாழும் 21 சதவீத ஓ.பி.சி. மக்களுக்கான சலுகைகள் வழங்கப்படும். பாரதம் யாரையும் சீண்டாது. பாரதத்தை யாராவது சீண்டினால் அவர்களை சும்மா விடமாட்டோம். எல்லையில் பாகிஸ்தான் ஒரு குண்டு போட்டால், பாகிஸ்தான் மீது எண்ணி பார்க்க முடியாத அளவிற்கு தாக்குதல்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story