வானூர் அருகே பெண் கொலை: ‘என்னை தரக்குறைவாக பேசியதால் கத்தரிக்கோலால் குத்தினேன்’ போலீசில் சரண் அடைந்த கணவர் வாக்குமூலம்


வானூர் அருகே பெண் கொலை: ‘என்னை தரக்குறைவாக பேசியதால் கத்தரிக்கோலால் குத்தினேன்’ போலீசில் சரண் அடைந்த கணவர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 8 April 2019 4:15 AM IST (Updated: 8 April 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

வானூர் அருகே பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவர் போலீசில் சரண் அடைந்தார். தன்னை தரக்குறைவாக பேசியதால் கத்தரிக்கோலால் குத்தி கொன்றதாக அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

வானூர்,

வானூர் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வரங்கம் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி நதியா (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் நதியாவின் நடத்தையில் செல்வரங்கத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மாலையிலும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வரங்கம் கத்தரிக்கோலால் மனைவியை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த நதியா சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக செத்தார்.

இந்த கொலை குறித்து கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தப்பி ஓடிவிட்ட செல்வரங்கத்தை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தேடப்பட்டு வந்த செல்வரங்கம் நேற்று கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் சரண் அடைந்தார்.

அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் கட்டிட வேலைக்கு சென்று வந்தேன். என்னுடைய மனைவி நதியாவின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் எங்கள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் எனக்கும் என் மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது அவர் என்னை மிகவும் தரக்குறைவாக பேசி திட்டியதால் எனக்கு அளவு கடந்த ஆத்திரம் ஏற்பட்டது. அதனால் வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து அவரை சரமாரியாக குத்தினேன். இதில் அவர் ரத்தக்காயங்களுடன் கீழே மயங்கி விழுந்தார். அதன் பிறகு எனக்கு பயம் ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்து வெளியே ஓடிவிட்டேன். மாத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் முந்திரி தோப்புக்குள் சென்று மறைந்து இருந்தேன்.

அதன் பிறகு என்னுடைய மனைவி இறந்துவிட்டதும், அவரை கொலை செய்ததாக என்னை போலீசார் தேடுவதையும் அறிந்தேன். எப்படியும் என்னை போலீசார் பிடித்துவிடுவார்கள் என தெரிந்து கொண்டேன். எனவே நானே வந்து போலீசாரிடம் சரண் அடைந்து விட்டேன்.

இவ்வாறு அந்த வாக்கு மூலத்தில் செல்வரங்கம் கூறினார். இதைத்தொடர்ந்து செல்வரங்கத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேல் விசாரணை நடந்து வருகிறது.

Next Story