அரசு பஸ் மோதி ராணுவ வீரர் பலி பணிக்கு திரும்ப இருந்த நிலையில் பரிதாபம்


அரசு பஸ் மோதி ராணுவ வீரர் பலி பணிக்கு திரும்ப இருந்த நிலையில் பரிதாபம்
x
தினத்தந்தி 8 April 2019 4:18 AM IST (Updated: 8 April 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் அரசு பஸ் மோதி ராணுவ வீரர் பலியானார். பணிக்கு திரும்ப இருந்த நிலையில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

பாவூர்சத்திரம்,

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆரியங்காவூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் மணிக்குமார் (வயது 27). இவர் டெல்லியில் 6 ஆண்டுகளாக ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். மணிக்குமார் தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, மாலையில் அவர் பணிக்கு திரும்புவதற்காக திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மணிக்குமார் நேற்று திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாவூர்சத்திரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

பாவூர்சத்திரம் பஸ்நிலையம் அருகே உள்ள நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் வந்த போது எதிர்பாராதவிதமாக நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி வந்த ஒன் டூ ஒன் அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த மணிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிக்குமாரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான ஆயிரப்பேரியை சேர்ந்த மாரியப்பன் (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. நான்கு சாலைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பஸ் மோதி ராணுவ வீரர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story