பொய்யான வாக்குறுதிகளை கூறும் பா.ஜனதா ஆட்சியை பொதுமக்கள் தூக்கி எறிய வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளர் பேட்டி


பொய்யான வாக்குறுதிகளை கூறும் பா.ஜனதா ஆட்சியை பொதுமக்கள் தூக்கி எறிய வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 9 April 2019 4:15 AM IST (Updated: 9 April 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

பொய்யான வாக்குறுதிகளை கூறும் பா.ஜனதா ஆட்சியை பொதுமக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளர் சுதாகர்ரெட்டி கூறினார்.

திருப்பூர்,

தேர்தல் பிரசாரத்துக்காக திருப்பூர் வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சுதாகர் ரெட்டி நேற்று திருப்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஊழல் கறை படிந்த அ.தி.மு.க.வை, பா.ஜனதா கட்சி தனது கைக்குள் அடக்கி வைத்துள்ளது. முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பினாமிகளிடம் வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அதன் மூலம் அவர்களை தங்களுடைய அடிமைகளாக மாற்றி வைத்துள்ளனர். இந்தியா முழுவதும் பேச்சுரிமை, எழுத்துரிமை முழுவதும் நசுக்கப்பட்டு வருகிறது. இந்துத்துவ கொள்கைக்கு எதிராக பேசுபவர்கள், எழுதுபவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இந்திய இறையாண்மைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி மக்கள் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மோடியின் கடந்த தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரு.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கினார். இதுவரை செய்யவில்லை.

பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்குகளை பெறும் பா.ஜனதா கட்சியின் ஆட்சியை பொதுமக்கள் தூக்கி எறிய வேண்டும். ஜம்மு–காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோத வைத்து 44 வீரர்களை தீவிரவாதிகள் கொன்றனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை கொன்ற சம்பவத்தை கூறி தேர்தல் ஆதாயத்தை தேடும் மலிவான அரசியலை பா.ஜனதா அரசு செய்து வருகிறது. நாட்டையும், வங்கியையும் ஏமாற்றி விட்டு வெளிநாடுகளுக்கு ஓடிய லலித்மோடி, நீரவ் மோடி, சோக்சி போன்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பா.ஜனதா ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளன. ஆதிதிராவிடர்கள் மீதான தாக்குதலும் அதிகரித்துள்ளது. தாக்குதலுக்கு நேரடியாகவே பா.ஜனதாவினர் துணை நிற்கின்றனர். தமிழகத்தில் போலீசார் கூட அவர்கள் விரும்பியபடி வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தபால் ஓட்டு சீட்டில் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படியே வாக்களிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்படும். எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படும். விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்கப்படும். இதனால் மக்கள் விரோத பா.ஜனதா அரசை தூக்கி எறிந்து ஜனநாயக அரசை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story