8 வழிச்சாலை குறித்த ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறோம் மார்க்சிஸ்ட் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
8 வழிச்சாலை குறித்த ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பல்லடத்தில் பேட்டி அளித்தார்.
பல்லடம்,
பல்லடத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:–
பா.ஜனதா ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்..டி வரி விதிப்பால் விசைத்தறி, சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே ஜி.எஸ்.டி.வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் கோவை, சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் விசைத்தறிகள், என்ஜினியரிங் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்த 2014–ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட ஒப்பந்தக்கூலி இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான தறிகள் இயங்கவில்லை. ஆனால் ஜி.எஸ்.டி.வரியால் எந்தவித பிரச்சினையும் இல்லை என பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். எந்த மொழியையும் யாரும் விரும்பி படிக்கலாம். ஆனால் அதை திணிக்க கூடாது. நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள் இடத்துக்கு இடம் வேறுபடும். எனவே அதை ஏற்க முடியாது. 8 வழிச்சாலை சம்பந்தமாக ஐகோர்ட்டு அறிவித்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.