திருத்தணியில் பயங்கரம் கொள்ளையை தடுக்க முயன்ற தாய்-மகன் படுகொலை


திருத்தணியில் பயங்கரம் கொள்ளையை தடுக்க முயன்ற தாய்-மகன் படுகொலை
x
தினத்தந்தி 9 April 2019 12:00 AM GMT (Updated: 8 April 2019 7:19 PM GMT)

திருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரக்கோணம் சாலையில் உள்ள பீ.டி.புதூரை சேர்ந்தவர் வனபெருமாள் (வயது 50). இவர் திருத்தணி அருகே இச்சிபுத்தூரில் உள்ள டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி வீரலட்சுமி (45). இவர் மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு பவித்ரா (25) என்ற மகளும், போதிராஜா (10) என்ற மகனும் இருந்தனர். மகள் பவித்ரா திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். மகன் போதிராஜா அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் வனபெருமாள் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் வீரலட்சுமியும், மகன் போதிராஜாவும் இருந்தனர். வேலை முடிந்தவுடன் நேற்று காலை வனபெருமாள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு ரத்தவெள்ளத்தில் மனைவி வீரலட்சுமி இறந்து கிடந்தார். மகனும் இறந்து கிடந்தான். உடனே அவர் கதறி அழுதார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல் இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் திருத்தணி துணை சூப்பிரண்டு சேகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்பல் கொள்ளையடிக்க முயன்றது. அப்போது சத்தம் கேட்டு வீரலட்சுமி எழுந்துள்ளார். அவர் தடுக்க முயன்றபோது, வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து வீரலட்சுமியின் கழுத்தில் வெட்டினர். பின்னர் இரும்பு ஆயுதம் கொண்டு தாக்கி அவரை கொடூரமாக கொலை செய்தனர்.

சத்தம் கேட்டு எழுந்த சிறுவன் போதிராஜாவை இஸ் திரிபெட்டியின் வயரால் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் அங்குள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 21 பவுன் தங்கநகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு மர்மகும்பல் தப்பி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்திற்கு திருவள்ளூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிதுதூரம் ஓடி சென்று, பின்னர் நின்று விட்டது.

மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட மர்மகும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் குற்றவாளிகளை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story