பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக பொள்ளாச்சி மாறிவிட்டது கமல்ஹாசன் ஆவேசம்


பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக பொள்ளாச்சி மாறிவிட்டது கமல்ஹாசன் ஆவேசம்
x
தினத்தந்தி 8 April 2019 11:00 PM GMT (Updated: 8 April 2019 7:29 PM GMT)

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக பொள்ளாச்சி மாறிவிட்டது என்று கமல்ஹாசன் ஆவேசமாக கூறினார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் மூகாம்பிகை ரத்தினத்தை ஆதரித்து, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று மாலை அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பொள்ளாச்சிக்கு நான் கடந்த முறை வந்திருந்தபோது எனக்கு பேசுவதற்கு மிக குறைவாக நேரம் கொடுக்கப்பட்டு இருந்தது. அப்போது நான் சொன்னேன் எனக்கு 3 நிமிடம் கொடுங்க, புரட்சி ஆரம்பிக்க முடியும் என்று சொன்னேன். இப்போது 10 மாதங்கள் கழித்து புரட்சியின் முழுவடிவமாக வந்து நிற்கிறேன்.

நம் பெண் பிள்ளைகளுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லாத நகரமாக பொள்ளாச்சியை மாற்றி இருக்கிறார்கள். இந்த தவறுக்கு மெத்தனம் தான் காரணம். தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதுவரை ஒரு முறையாவது எங்கள் ஆட்சியில் இப்படி நடந்து இருக்கிறது. நாங்கள் வருந்துகிறோம் என்று முதல்–அமைச்சர் வருத்தம் தெரிவிக்கவில்லை. இதெல்லாம் நடக்கும் பெரிதுபடுத்த வேண்டாம் என்கிறார்கள்.

அவர்கள் காவல்துறை உதவி இல்லாமல் உங்கள் பக்கத்தில் வரவே பயப்படுவார்கள். அந்த அளவுக்கு அவர்கள் குற்றம் புரிந்தவர்கள். ஆனால் பெரிய உத்தமர்கள் போல் பேசி கொள்கிறார்கள். இவர்கள் எம்.ஜி.ஆர். சேர்த்து வைத்த சொத்தில் வாழ்ந்து கொண்டும், அனுபவித்தும் கொண்டும் இருக்கிறார்கள்.

என்னை பார்த்து என்ன சொல்வது என்று தி.மு.க.க்கு புரியவில்லை. என்னை பா.ஜனதாவின் ‘பி’ அணி என்று கூறுகின்றனர். அப்படி என்றால் பக்கத்து மாநிலத்தில் பினராயி விஜயனும் ‘பி’ அணி தான். இது நடிகனை பார்க்க வரும் கூட்டம் என்றும், இது ஓட்டாக மாறது என்றும் சிலர் சொல்கிறார்கள். நான் சொல்கிறேன் இது நடிகனை பார்க்க வந்த கூட்டம் அல்ல. மாற்றத்தை பார்ப்பதற்கு வந்த கூட்டம். அவர்கள் ஆளை பார்க்க வரவில்லை. செயலை பார்க்க வந்திருக்கிறார்கள்.

உங்களுடைய வேட்பாளர் மூகாம்பிகை பெண்ணின் நிலை புரிந்தவர். பெண்ணுக்காக குரல் கொடுப்பவர். சொன்ன வாக்கை நிறைவேற்றவில்லை என்றால் ராஜினாமா கடிதம் கொடுத்து விடுகிறேன் என்ற வாக்குறுதியுடன் வருகிறார். இவர் உங்களுடைய வேட்பாளர் அவர் கையில் இருப்பது நமது சின்னம் டார்ச்லைட் என்பதை நினைவு வைத்து கொள்ளுங்கள்.

புதிய தமிழ்நாட்டை உருவாக்கும் பொறுப்பில் நாம் இருக்கிறோம். நாம் வாழ்ந்த வாழ்க்கையை நம் சந்ததியினர் வாழாமல் இருக்க வேண்டும். காலத்தை பயிர் செய்ய வேண்டும். இது தான் அந்த காலம். அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் என்று தாமதப்படுத்தி விடாதீர்கள். தாமதப்படுத்தினால் இன்னும் 2 தலைமுறை பாழாய் போகும். அதற்கு வழிவிடாமல் நல்ல எதிர்காலத்துக்கு உங்கள் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்ற டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்களியுங்கள். இது என் தொழில் அல்ல. என் கடமை. தமிழகத்திற்கு ஆயுள் நீள போகிறது. தமிழனின் வெற்றி தொடர போகிறது. மீண்டும் நினைவுப்படுத்துகிறேன் சகோதரி மூகாம்பிகைக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். நாளை நமதே.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story