கோவை கல்லூரி மாணவி கொலை வழக்கில் கைதான உறவினர் சிறையில் அடைப்பு


கோவை கல்லூரி மாணவி கொலை வழக்கில்  கைதான உறவினர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 8 April 2019 10:30 PM GMT (Updated: 8 April 2019 7:34 PM GMT)

கோவை கல்லூரி மாணவியை கொலை வழக்கில் கைதான உறவினரை போலீசார் மத்திய சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைசாமி. இவருடைய மகள் பிரகதி (வயது 20). இவர் கோவை–ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் பிரகதிக்கும், நாட்டுத்துரை என்ற வாலிபருக்கும் வருகிற ஜூன் மாதம் 13–ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

நண்பர்கள், உறவினர்களை திருமணத்திற்கு அழைக்க பத்திரிகையும் அச்சடிக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த 5–ந் தேதி கல்லூரியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட அவரை காணவில்லை. இதுகுறித்து கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் காணாமல் போன பிரகதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டியில் ரோட்டோரத்தில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி கொலை தொடர்பாக அவரது உறவினரான சதீஷ்குமார் என்பவரை ஒட்டன்சத்திரத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், நான் பிரகதியை விரும்பினேன். பிரகதியும் என்னை விரும்பினார். ஆனால் எனக்கு பிரகதியை திருமணம் செய்து கொடுக்க அவளுடைய பெற்றோர் மறுத்து விட்டனர். இந்த நிலையில் பிரகதிக்கு திருமணம் நிச்சயமானதால் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து போலீசார் சதீஷ்குமாரை நேற்று மாலை பொள்ளாச்சி ஜே.எம்.2 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து சதீஷ்குமாரை நீதிபதி ரேவதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.


Next Story