கும்பகோணத்தில் குடோனில் தீ விபத்து; ரூ.4 லட்சம் எலக்ட்ரிக் பொருட்கள் எரிந்து நாசம்


கும்பகோணத்தில் குடோனில் தீ விபத்து; ரூ.4 லட்சம் எலக்ட்ரிக் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 8 April 2019 11:00 PM GMT (Updated: 8 April 2019 7:40 PM GMT)

கும்பகோணத்தில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கொட்டையூரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருடைய மனைவி மகேஸ்வரி(வயது 39). அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவருடைய மனைவி ரம்யா(27). மகேஸ்வரியும், ரம்யாவும் சேர்ந்து கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகத்தில், எலக்ட்ரிக் பொருட்கள் மொத்த விற்பனை கடையை நடத்தி வருகிறார்கள். இந்த கடையின் குடோன் வணிக வளாகத்தின் மற்றொரு பகுதியில் உள்ளது.

இந்த நிலையில் குடோனில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்து புகை மூட்டம் கிளம்பியது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் குடோனுக்கு அருகே சென்று பார்த்தபோது எலக்ட்ரிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து கும்பகோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

ரூ.4 லட்சம் சேதம்

தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் குடோனில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக குடோனில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story