10 ஆண்டுகளுக்கு மேலாக பஸ் வசதி இல்லை கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு


10 ஆண்டுகளுக்கு மேலாக பஸ் வசதி இல்லை கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 9 April 2019 3:30 AM IST (Updated: 9 April 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

10 ஆண்டுகளுக்கு மேலாக பஸ் வசதி இல்லை என்று நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே நல்லம்பாக்கம் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நல்லம்பாக்கம் கிராமத்தில் இருந்து கண்டிகை, வண்டலூர் வழியாக தாம்பரத்துக்கு மாநகர பஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட பொதுமக்களின் போக்குவரத்துக்கு உதவியாக இருந்தது.

கண்டிகையில் இருந்து நல்லம்பாக்கம் செல்லும் சாலை பழுதடைந்து போனதால் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு அரசு பஸ் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த பஸ் இயக்கப்படவில்லை.

அன்று முதல் பொதுமக்கள் 3 கி.மீ. தூரம் நடந்து கண்டிகை சென்று அங்கிருந்து வண்டலூர், தாம்பரம் பஸ்களில் சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளானார்கள். உடனடியாக அந்த பகுதியில் மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வண்டலூர் வரை மினி பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கையில் கருப்புக்கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story