பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காதவர் தேர்தலுக்காக மக்களை தேடி வருகிறார்: ரங்கசாமி மீது, அமைச்சர் நமச்சிவாயம் குற்றச்சாட்டு


பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காதவர் தேர்தலுக்காக மக்களை தேடி வருகிறார்: ரங்கசாமி மீது, அமைச்சர் நமச்சிவாயம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 April 2019 11:30 PM GMT (Updated: 8 April 2019 8:05 PM GMT)

பிரச்சினைகளின்போது குரல் கொடுக்காதவர் தேர்தலுக்காக மக்களை தேடி வருகிறார் என்று ரங்கசாமி மீது அமைச்சர் நமச்சிவாயம் குற்றஞ்சாட்டி உள்ளார்.

புதுச்சேரி,

புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் முதலியார்பேட்டை தொகுதியில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தனர்.

அப்போது அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:–

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சியில் மதவாதம், பயங்கரவாதம் தலை தூக்கி உள்ளது. மக்கள் நிம்மதியாக வாழ ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும். அதற்கு புதுவை தொகுதியில் வைத்திலிங்கம் வெற்றிபெற வேண்டும்.

அவரை வெற்றி பெற வைப்பது நமது கடமை. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால்தான் திட்டங்கள் கிடைக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது புதுவை மாநிலத்தில் வளர்ச்சி ஏற்பட்டது. காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பம் புதுச்சேரி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளது.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. இலவச அரிசி, சென்டாக் உதவித்தொகை, முதியோர் பென்சன் உதவத்தொகை தடையின்றி கிடைக்க ராகுல்காந்தி பிரதமராக வேண்டும். புதுவைக்கு மாநில அந்தஸ்து தருவதாக ராகுல்காந்தி கூறியுள்ளார். மக்கள் மீது அக்கறை, பரிவு கொண்ட கூட்டணி நமது கூட்டணி.

இந்தியாவை மீண்டும் ஒருமுறை நரேந்திரமோடி ஆள அனுமதித்தால் அனைவரும் அடிமை ஆகிவிடுவோம். என்.ஆர்.காங்கிரஸ் பயந்துபோய் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள் பிரச்சினைகளைப்பற்றி எந்த கவலையும் படாத ரங்கசாமி தேர்தல் என்றவுடன் மக்களிடம் வந்துள்ளார்.

இந்த தேர்தல் காந்திய நாடா? கோட்சே நாடா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது. மக்கள் நலனுக்கென்று எந்த ஒரு எதிர்கால திட்டமும் இல்லாதவர் ரங்கசாமி. எதிர்கட்சி தலைவர் என்ற பதவியின் பொறுப்பினை உணர்ந்து செயல்படாதவர். மக்களைப்பற்றி இவ்வளவு காலம் சிந்திக்காமல் தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்க வருகிறார். புதுவை மாநிலம் நிதிக்சுமையில் சிக்கிட காரணமானவர் ரங்கசாமி.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

பிரசாரத்தின்போது அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:–

புதுவையில் பெரிய போராட்டத்துக்குப்பின் இலவச அரிசி போட அனுமதி பெற்றோம். இதற்காக அரிசியும் வந்துவிட்டது. ஆனால் அரிசி போட அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் இலவச அரிசி போடுகிறார்கள். தமிழகத்தில் ஒரு நிலை? புதுச்சேரியில் ஒரு நிலையா?

ரங்கசாமி ஆட்சியில் இருந்தபோது வாங்கிய கடனுக்கு முதலாம் ஆண்டு ரூ.300 கோடியும், 2–வது ஆண்டில் ரூ.500 கோடியும், 3–வது ஆண்டில் ரூ.700 கோடியும் வட்டி கட்டியுள்ளோம். அடுத்த ஆண்டு ரூ.1000 கோடி கட்ட வேண்டியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாய கடனை தள்ளுபடி செய்தோம்.

என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.பி.க்கள் புதுவை வளர்ச்சிக்கு நிதி பெற்று தரவில்லை.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.


Next Story