டெல்லியில் மவுனமாக இருந்து விட்டு தனி மாநில அந்தஸ்து கேட்பது நாடகம்: நாராயணசாமி மீது ரங்கசாமி தாக்கு


டெல்லியில் மவுனமாக இருந்து விட்டு தனி மாநில அந்தஸ்து கேட்பது நாடகம்: நாராயணசாமி மீது ரங்கசாமி தாக்கு
x
தினத்தந்தி 8 April 2019 11:00 PM GMT (Updated: 8 April 2019 8:05 PM GMT)

டெல்லியில் மவுனமாக இருந்து விட்டு இப்போது தனி மாநில அந்தஸ்து கேட்பது நாடகம் என நாராயணசாமி மீது ரங்கசாமி கடுமையாக தாக்கினார்.

காரைக்கால்,

நாடாளுமன்ற தேர்தலில், புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி கட்சி வேட்பாளராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் டாக்டர் நாராயணசாமி ஜக்கு சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து காரைக்கால் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நேற்று காலை காரைக்கால் வடக்குத் தொகுதி, தெற்குத் தொகுதி மற்றும் நிரவி-திருமலைராயன்பட்டினம் தொகுதிகளில் திறந்தவேனில் நின்றபடியே ரங்கசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

காரைக்கால் மதகடி பாலத்தில் நின்று பிரசாரம் செய்தபோது ரங்கசாமி பேசியதாவது:-

என்.ஆர் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகளோடு வலுவான கூட்டணி அமைத்துள்ளது. எங்கள் வேட்பாளர் படித்த இளைஞர், டாக்டர், பண்பாளர், மக்கள் சேவையில் ஆர்வம் கொண்டவர். நமக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கக்கூடியவர். அதனால் எங்களை நம்பி, எங்கள் கூட்டணியை நம்பி ஜக்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.

கடந்த 3 ஆண்டுகளில் புதுச்சேரியில் எந்த புதிய திட்டத்தையும் முதல்-அமைச்சர் நாராயணசாமி கொண்டு வரவில்லை. இலவச அரிசி, பண்டிகைக் கால இலவசங்கள், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, வேட்டி, சேலை என அனைத்து நலத்திட்டங்களையும் கவர்னர் தடுக்கிறார் என முதல்-அமைச்சர் நிறுத்திவிட்டார். அதனால்தான் கூறுகிறேன். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவேண்டுமென்றால், ஜக்கு சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

புதுச்சேரிக்கான தனி மாநில அந்தஸ்து வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது என்.ஆர் காங்கிரஸ் கட்சிதான். எங்களுக்கு ஆதரவாக, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா, டெல்லி பாராளுமன்றத்தில், அ.தி.மு.க. எம்.பி.க்கள் மூலம் தொடர்ந்து பேச வைத்தார்.

அந்த சமயத்தில் புதுச்சேரி மாநிலத்துக்கு தனி மாநில அந்தஸ்து கொடுக்கக்கூடிய இடத்தில் மத்திய மந்திரியாக இருந்த நாராயணசாமி மவுனமாக இருந்துவிட்டு, இப்போது தனி மாநில அந்தஸ்து கேட்பது நாடகம்.

இந்த தேர்தலுக்கு பிறகு மத்தியில் மீண்டும் பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிதான் மலரும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அவை உண்மையான கருத்து கணிப்பு. மக்கள் நம்பும் கருத்துகணிப்புகள். அத்தகைய நரேந்திர மோடியின் ஆசி பெற்ற சின்னம், ஜக்கு சின்னம். மறைந்த ஜெயலலிதா ஆசி பெற்ற சின்னம் ஜக்கு சின்னம். கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஆசிபெற்ற சின்னம் ஜக்கு சின்னம், எனவே மக்கள் மறவாமல் ஜக்கு சின்னத்தில் வாக்களித்து, புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுகிறேன்.

புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சி முதல்-அமைச்சர் நாராயணசாமியை மக்கள் இந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

Next Story