தேன்கனிக்கோட்டையில் அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி


தேன்கனிக்கோட்டையில் அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி
x
தினத்தந்தி 9 April 2019 4:00 AM IST (Updated: 9 April 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை வாக்குச்சாவடியில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சியை தேர்தல் பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே நேரில் ஆய்வு செய்தார்.

தேன்கனிக்கோட்டை, 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நேற்று நடந்தது. இதை தேர்தல் பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து அலுவலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார். பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்காளர் சேவை மையம் மற்றும் மாதிரி வாக்குச்சாவடியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4 இடங்களில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக 4 மாதிரி வாக்குச்சாவடியில் ஒரு வாக்குச்சாவடி பெண் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் விதமாக அமைக்கப்பட உள்ளது.

இந்த மாதிரி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி, உட்காருவதற்கு நாற்காலிகள் அமைப்பது, சுகாதார வளாக வசதிகள் மேற்கொள்வது, மின்விசிறி வசதிகள் மேற்கொள்வது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பயிற்சி மையத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் தபால் வாக்கு அளிக்கும் வசதிகளை தேர்தல் பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே ஆய்வு செய்தார்.

தொடர்ந்து தாசில்தார் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ள வாக்காளர் பட்டியல் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்தார். நேற்று நடந்த பயிற்சி வகுப்பில் 1,355 ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வின் போது உதவி தேர்தல் அலுவலர் முரளி, தாசில்தார்கள் முத்துபாண்டி, பெருமாள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Next Story