எர்ணாகுளம்– வேளாங்கண்ணிக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் காரைக்குடியில் பயணிகள் வரவேற்பு


எர்ணாகுளம்– வேளாங்கண்ணிக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் காரைக்குடியில் பயணிகள் வரவேற்பு
x
தினத்தந்தி 9 April 2019 4:00 AM IST (Updated: 9 April 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

எர்ணாகுளம்– வேளாங்கண்ணி புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் காரைக்குடி வழியாக வேளாங்கண்ணிக்கு சென்றது. அந்த ரெயில் காரைக்குடி வந்த போது பயணிகள் வரவேற்பு கொடுத்தனர்.

காரைக்குடி,

தெற்கு ரயில்வே துறை சார்பில் அண்மையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த ரெயில் சோதனை ஓட்டமாக 3 மாதத்திற்கு மட்டும் கடந்த 6–ந் தேதி தொடங்கி வருகிற ஜூன் 30–ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஓடும் என அறிவிக்கப்பட்டது.

சுமார் 734 கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்த ரெயில் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவள்ளா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம் சந்திப்பு, குந்தாரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக மறுநாள் காலை வேளாங்கண்ணி சென்றடைகிறது.

இந்த ரெயில் இரவு 11 மணிக்கு காரைக்குடி ரெயில் நிலையம் வந்தது. அப்போது அங்கிருந்த பயணிகள் உள்பட காரைக்குடி தொழில் வணிக கழகத் தலைவர் சாமி திராவிடமணி, ரோட்டரி சங்க நிர்வாகி கந்தசாமி லயன்ஸ் சங்க ஆலோசகர் கண்ணப்பன், சையது ஆகியோர் ரெயில் ஓட்டுனர்கள், கார்டுகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்றனர். பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் 7 முன்பதிவு படுக்கை வசதி பெட்டிகள் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகள் 2, சரக்கு பெட்டிகள் 2, மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் 3 என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.

மறுமார்க்கத்தில் இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமை புறப்படுகிறது. கோடை காலத்தில் விடுமுறைகள், கேரள பயணிகள் வேளாங்கண்ணி ஆலயம் செல்லவும், தென் மாவட்ட பயணிகள் கேரளாவில் உள்ள கோவிலுக்கு செல்லவும் இந்த ரெயில் வசதியாக உள்ளது. மேலும் காரைக்குடி–திருவாரூர் அகல ரெயில்பாதை முடிவடைந்துள்ள நிலையில், இந்த ரெயிலை விரைவில் பட்டுக்கோட்டை மயிலாடுதுறை, திருவாரூர் வழியில் மாற்றப்படலாம் என ரெயில்வே வட்டாரத்தில் கூறப்படுகிறது.


Next Story