பரமத்திவேலூர் அருகே, போலி பறக்கும் படையினர் ரூ.52 ஆயிரத்தை பறித்ததாக நாடகம் ஆடிய அரிசி வியாபாரி சிக்கினார்
பரமத்திவேலூர் அருகே போலீஸ் உடை அணிந்து வந்த மர்ம நபர்கள் தேர்தல் பறக்கும் படையினர் எனக்கூறி ரூ.52 ஆயிரத்தை பறித்துக்கொண்டு சென்றதாக, பொய் புகார் அளித்த அரிசி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள வீரணம்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 45), அரிசி வியாபாரி. இவர் நேற்று காலையில் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் அவர், ‘அரிசி விற்பனை செய்த ரூ.52 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு எனது ஸ்கூட்டரில் பாலப்பட்டி நோக்கி சென்றேன். பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே சென்ற போது, அங்கு போலீஸ் உடை அணிந்த 4 பேர் எனது ஸ்கூட்டரை தடுத்து நிறுத்தினர். அவர்கள் தேர்தல் பறக்கும் படையினர் எனக்கூறி ஸ்கூட்டரை சோதனையிட்டு நான் வைத்திருந்த ரூ.52 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
போலி பறக்கும் படையினர் என்று புகார் வந்ததை அடுத்து பரமத்திவேலூர் போலீசார் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த இடத்தில் போலீஸ் உடையில் வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்த போது, அவ்வாறு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து முத்துசாமி பொய் புகார் கொடுத்திருக்கலாமோ? என்ற கோணத்தில் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், அவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதும், அவர் அரிசி விற்பனை செய்த பணத்தை செலவு செய்துவிட்டதும் தெரியவந்தது. மீதமுள்ள ரூ.15 ஆயிரத்தை மட்டும் ஸ்கூட்டரில் கொண்டு வந்துள்ளார். ஆனால் அரிசி விற்பனை செய்த ரூ.52 ஆயிரத்தை பாலப்பட்டியில் அரிசிக்கடை நடத்தி வரும் சேகரிடம் கொடுக்க வேண்டி இருந்தது. இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க, போலீஸ் உடை அணிந்து வந்த மர்ம நபர்கள் தேர்தல் பறக்கும் படையினர் என கூறி தன்னிடம் இருந்து ரூ.52 ஆயிரத்தை பறித்து சென்றதாக அவர் பொய் புகார் அளித்து நாடகம் ஆடியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தை பறிமுதல் செய்து மற்றொரு அரிசி வியாபாரி சேகரிடம் கொடுத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story