டி.டி.வி.தினகரனின் சுயநலத்தால்தான் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்


டி.டி.வி.தினகரனின் சுயநலத்தால்தான் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 8 April 2019 11:15 PM GMT (Updated: 8 April 2019 8:20 PM GMT)

“டி.டி.வி.தினகரனின் சுயநலத்தால்தான் 18 தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது” என்று பரமக்குடி தேர்தல் பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சதன் பிரபாகர் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை ஆதரித்து பரமக்குடி பஸ் நிலையம் பகுதியில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த தேர்தல் இடைத்தேர்தல் அல்ல, எடைபோடும் தேர்தல். யார் ஆட்சிக்கு வந்தால், யார் வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்பதை ஆராய்ந்து வாக்களிக்கும் தேர்தல்.

தொண்டர்கள் இயக்கமாக அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அதன்பிறகு ஜெயலலிதா அதை வளர்த்து வந்தார். அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்ததுதான் வரலாறு. அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை. தி.மு.க. ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து செய்து அப்பாவிகளின் சொத்துக்களை பிடுங்கினர்.

பின்பு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா அதையெல்லாம் மீட்டுக்கொடுத்தார். தற்போது ரூ.1,500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இது ஏழை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

டி.டி.வி.தினகரனின் சுயநலத்தால் தான் தற்போது 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னத்திலும், அ.தி.மு.க. வேட்பாளர் சதன் பிரபாகரனுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்குகளை அளித்து அவர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். அப்போது மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி உள்பட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

தொடர்ந்து திருவாடானை அருகே உள்ள சி.கே.மங்கலத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன், அரசியல் களத்தில் பல்வேறு அனுபவங்களை கொண்டவர். அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக அனுபவம் பெற்றவர். எனவே அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் இந்த பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் மிகவும் அக்கறையுடன் செயலாற்றுவார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 200 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு இதுவரை ரூ.174 கோடியே 6 லட்சம் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை விவசாயிகளுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. மேலும் 179 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.281 கோடியே 62 லட்சம் விரைவில் அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story