பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்காததால் கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்ட விவசாயிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு
திருவாடானை தாலுகா கட்டவிளாகம் வருவாய் கிராமத்திற்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்காததால் அப்பகுதி விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்டனர். சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொண்டி,
திருவாடானை தாலுகா கட்டவிளாகம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு கடந்த 2017–18–ம் ஆண்டிற்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை இதுநாள் வரை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் திருவாடானை தாலுகாவில் உள்ள விவசாயிகளுக்கு கடந்த 2017–18–ம் ஆண்டிற்குரிய பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் கட்டவிளாகம் வருவாய் கிராமத்திற்கு மட்டும் இதுவரை விவசாயிகளின் வங்கி கணக்கில் பயிர் காப்பீடு தொகை வரவு வைக்கப்படவில்லை. இதையடுத்து கட்டவிளாகம் வருவாய் கிராமத்தை சேர்ந்த கட்டவிளாகம், கள்ளவழியேந்தல், ருத்திரன்பட்டி, இழுப்பக்குடி, கீழ்க்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விவசாய சங்க தலைவர் கட்டவிளாகம் நமச்சிவாயம் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு சென்று தங்களின் கோரிக்கையை வலியுறுத்தியும், பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்படாததை கண்டித்தும் அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமியை முற்றுகையிட்டு சிறைபிடித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவாடானை தாசில்தார் சேகர், மங்களக்குடி வருவாய் ஆய்வாளர் அருண், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கட்டவிளாகம் கிராமத்துக்கு சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் சார்பில் கடந்த 2017–18–ம் ஆண்டுக்கு கட்டவிளாகம் வருவாய் கிராமத்தில் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தான் கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்டு சிறைபிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து திருவாடானை தாசில்தார் சேகர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை சேக்) அப்துல்லா ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கட்டவிளாகம் வருவாய் கிராம மக்களின் கோரிக்கை குறித்து தகவல் தெரிவித்தார். அதன் பின்னர் தாசில்தார் சேகர் அங்கு கூடியிருந்த விவசாயிகளிடம் கட்டவிளாகம் வருவாய் கிராமத்திற்கு இன்னும் ஓரிரு தினங்களில் 3–வது தவணை தொகையாக பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றும், முழு தொகையும் கிடைக்கும் என்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் உறுதியளித்துள்ளார் என்ற தகவலை தெரிவித்தார்.
அதன் பின்னர் விவசாயிகள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாமல் காலம் தாழ்த்தினால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100 சதவீத வாக்கு பதிவை புறக்கணித்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமியை விடுவித்து தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.