சிக்கல் கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சிக்கல் கிராமத்தில் பொதுமக்கள் காலி குடங்களுடன் நடு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழக்கரை,
கடலாடி யூனியன் சிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட உட்கடை, கழநீர்மங்கலம் ஆகிய கிராம பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் மேல்நிலைத்தொட்டி நல்ல நிலையில் இருந்தும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் இந்த பகுதிக்கு தொட்டியபட்டி கிராமத்தில் உள்ள உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் மூலமாக வினியோகம் செய்யப்பட்ட குடிநீரும் தற்போது வரவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பொதுமக்கள் காலி குடங்களுடன் நடு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், பாக்கிய நாதன் ஆகியோர் கூறும்போது, எங்கள் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு நீண்ட நாட்களாகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக பல மைல் தூரம் சென்று ஒரு குடம் தண்ணீரை ரூ.10 விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் அவதியை போக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.