8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுக்க தடை: ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி


8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுக்க தடை: ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 8 April 2019 11:00 PM GMT (Updated: 8 April 2019 8:24 PM GMT)

8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சந்திரபிரபா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:–

8 வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்ததை அரசுக்கு பின்னடைவு என்று கருதக் கூடாது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும். தொழில் துறை வளர்ச்சிக்கு சாலை வசதி மிகவும் அவசியம். அடுத்த கட்டமாக கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து பேசி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு முதல்–அமைச்சர் முடிவு எடுப்பார்.

எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, வி‌ஷ வாயு என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். எடப்பாடியை எதிர்க்கும் அரசியல் இயக்கம் ‘டெட்பாடி’யாக ஆகிவிடும்.

எழுதி கொடுத்த பேப்பரை பார்த்துதான் ஸ்டாலின் படிப்பார். சட்டமன்றத்திலும் எழுதி வைத்து பேசுவார். கலைஞரிடம் இருந்த திறமை கடுகளவு கூட ஸ்டாலினிடம் இல்லை. தி.மு.க.வின் தலைவராக சந்தர்ப்ப குழ்நிலை காரணமாக ஸ்டாலின் ஆகிவிட்டார். கருத்துக் கணிப்பை தாண்டி, மக்கள் கணிப்பு வைத்துள்ளனர். மக்களின் கணிப்பு அ.தி.மு.க.தான். மோடி பிரதமராக வர வேண்டும் தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் டி.டி.வி.தினகரனுக்கு துளி அளவும் இல்லை. அவர் பணம், பணம் என்றுதான் உள்ளார். அவரிடம் மனம் இல்லை, குணம் இல்லை. ஸ்டாலின் ஒரு இடத்தில் மட்டும் கூட்டம் நடத்தி கூட்டத்தை கூட்டுகிறார். பல்வேறு இடங்களுக்கு சென்று முதல்–அமைச்சரை போல் திறந்த வேனில் ஸ்டாலின் பிரசாரம் செய்வாரா?

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக இருப்பதால்தான் மு.க.ஸ்டாலின் டீ சர்ட் போட்டு நடந்து சென்று ஓட்டு கேட்கிறார். தி.மு.க. ஆட்சி போல் சட்டம் ஒழுங்கு இருந்தால் அவரால் நடக்க முடியுமா?

ஸ்டாலின் பேச்சில் வன்மம் உள்ளது. சண்டையை தூண்டி விடுகிறார். எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என்று ஏக்க பெருமூச்சு விடுகிறார். அது நடக்கவே நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story