அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனை ஆதரித்து விளாத்திகுளம் பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரசாரம்
அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனை ஆதரித்து விளாத்திகுளம் பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரசாரம் செய்தார்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனை ஆதரித்து, அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ நேற்று விளாத்திகுளம் வில்வமரத்துபட்டியில் திறந்த ஜீப்பில் சென்று, தனது பிரசாரத்தை தொடங்கினார்.
பின்னர் அவர் சுந்தரேசபுரம், புதுகிராமம், அயன்பொம்மையாபுரம், கரிசல்குளம், அ.கந்தசாமிபுரம், ஆற்றங்கரை, கே.குமாரபுரம், குருவார்பட்டி, கோடாங்கிபட்டி, ஓ.துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் சென்று, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 9 மாதம் சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படுகிறது. மாணவர்கள், பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது.
எனவே ஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் தமிழக அரசு தொடர, வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து சின்னப்பனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்து விட்டுத்தான் தேர்தலை சந்திக்கிறோம். ஆனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியானது பிரதமர் வேட்பாளரை அடையாளம் காட்ட முடியாத கொள்கை இல்லாத கூட்டணியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவருடன் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன், நெல்லை, தூத்துக்குடி ஆவின் தலைவர் சின்னத்துரை, பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, ஜெயலலிதா பேரவை குட்லக் செல்வராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story