மக்களுக்கு ஏற்றம் தருவதாக உள்ளது: பா.ஜனதா தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டாராக திகழ்கிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


மக்களுக்கு ஏற்றம் தருவதாக உள்ளது: பா.ஜனதா தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டாராக திகழ்கிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 9 April 2019 3:00 AM IST (Updated: 9 April 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டாராக திகழ்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மதியம் திருச்செந்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை யாரையும் ஏமாற்றாத அறிக்கை. ஆனால் காங்கிரசின் தேர்தல் அறிக்கை போலியான ஏமாற்று அறிக்கை. வருகிற 2030-ம் ஆண்டிற்குள் வறுமையை ஒழிப்போம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறுகிறார். அவருடைய பாட்டி இந்திராகாந்தி கடந்த 1971-ம் ஆண்டு வறுமையை ஒழிப்பதாக கூறினார். பின்னர் அவர்கள் குடும்பத்தினர்தான் மாறி, மாறி ஆட்சி செய்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை.

காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கோடி தேவை. அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாது. ஏற்கனவே ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பா.ஜனதா அரசு மக்களுக்கு வழங்கி வருகிறது.

தமிழக மாணவர்களுக்கு சாதகமான முறையில் நீட் தேர்வு மாற்றி அமைக்கப்படும். நீட் தேர்வின் மூலம் ஏழை மாணவர்கள் அதிகளவில் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். மருத்துவ கல்லூரியில் கூடுதலாக 1,000 இடங்களும், முதுகலை மருத்துவ படிப்பில் கூடுதலாக 500 இடங்களும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அகில இந்திய அளவில் மருத்துவ கல்லூரிகளில் அதிகளவில் தமிழக மாணவர்கள் பயிலும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.

நீட் தேர்வில் விலக்கு என்று சுப்ரீம் கோர்ட்டின் வரம்பை மீறி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. நீட் தேர்வுக்கு முற்றிலுமாக விலக்கு அளிக்க முடியாது. அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் அதனை எதிர்க்கவில்லை.

தற்போது பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ.100 லட்சம் கோடியில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளது. நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தினாலே, ஏழைகள் வறுமையில் இருந்து தானாக விடுவிக்கப்படுவார்கள். அவர்கள் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்துக்கு அதிகமாக சம்பாதிக்க தொடங்கி விடுவார்கள். ஏழை விவசாயிகளுக்கு ஏற்கனவே ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.1-க்கு சானிட்டரி நாப்கின் வழங்குவதை வரவேற்கிறேன். இவற்றை பல இடங்களில் இலவசமாக வழங்கி வருகின்றனர். நாட்டின் கட்டமைப்புகள், நீர்வளம், நிலவளத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே, பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கைதான் தற்போது கதாநாயகனாக, சூப்பர் ஸ்டாராக திகழ்கிறது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையானது பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களுக்கு ஏமாற்றத்தை தரும். ஆனால் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கு ஏற்றம் தருவதாக அமைத்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலையில் வடக்கு ஆத்தூரில் திறந்த ஜீப்பில் சென்று தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் புன்னக்காயல், தெற்கு ஆத்தூர், கீரனூர், சாகுபுரம், காயல்பட்டினத்தில் பிரசாரம் செய்தார். அப்போது 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதாகவும், சிறுநீரக சிறப்பு மருத்துவரான தன்னுடைய கணவரின் மூலம் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் சிறுவனின் தாயாரிடம் கூறினார்.

பின்னர் திருச்செந்தூரில் தமிழிசை சவுந்தரராஜன் வாக்கு சேகரித்தார். திருச்செந்தூர் தெற்கு ரத வீதியில் 95 வயது மூதாட்டி கோட்டையம்மாள், தமிழிசை சவுந்தரராஜனுக்கு மலர் கிரீடம் அணிவித்து, சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரசாதம் மற்றும் வேல், சேவல் கொடி வழங்கினார்.

தொடர்ந்து ஆலந்தலை, நா.முத்தையாபுரம், பிச்சிவிளை, முருகன்குறிச்சி, நடுநாலுமூலைக்கிணறு, மேல அரசூர், தளவாய்புரம், கிருஷ்ணாநகர், பள்ளத்தூர், மணக்காடு, குடியிருப்புவிளை, பள்ளிப்பத்து, ஊத்தாரங்கரைவிளை, காயாமொழி, தேரிக்குடியிருப்பு, கானம், மேலப்புதுக்குடி, சோனகன்விளை, ராணிமகாராஜபுரம், அடைக்கலாபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சென்று தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

அவருடன் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ., பா.ஜனதா மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story