நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவின் போது மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக 150 சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப கலெக்டர் ஏற்பாடு


நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவின் போது மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக 150 சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப கலெக்டர் ஏற்பாடு
x
தினத்தந்தி 8 April 2019 11:00 PM GMT (Updated: 8 April 2019 8:43 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் பயன்பாட்டிற்காக நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்ட 150 சக்கர நாற்காலிகளை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் ஏற்பாடு செய்துள்ளார்.

நாமக்கல், 

நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தவறாமல் வாக்களிப்பதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதையொட்டி முதல்கட்டமாக நாமக்கல்லிற்கு 150 சக்கர நாற்காலிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அவை அனைத்தையும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 142 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் ஊரக வளர்ச்சி துறை மூலம் அந்தந்த கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சக்கர நாற்காலியை தேர்தலின்போது வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல் அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகளும் எளிதாக வாக்களிக்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே நாமக்கல்லுக்கு வந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உடனிருந்தார். இந்த சக்கர நாற்காலிகளை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிட உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள கலெக்டர் ஆசியா மரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் 774 பேர், காது கேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோர் 1,632 பேர், கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டோர் 6,816 பேர் மற்றும் இதர வகை மாற்றுத்திறனாளிகள் 625 பேர் என மொத்தம் 9,847 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story