அ.தி.மு.க. கூட்டணி தலைவர்களை பற்றி விமர்சனம்: மு.க.ஸ்டாலினுக்கு தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும் சங்ககிரியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


அ.தி.மு.க. கூட்டணி தலைவர்களை பற்றி விமர்சனம்: மு.க.ஸ்டாலினுக்கு தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும் சங்ககிரியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 9 April 2019 4:15 AM IST (Updated: 9 April 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கூட்டணி தலைவர்களை பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த தேர்தலில் நாம் பதிலடி கொடுக்க வேண்டும் என்று சங்ககிரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம், 

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சேலம் மாவட்டம் சங்ககிரியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் காளியப்பனை நீங்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி சட்டமன்ற தொகுதி மட்டும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. எனவே, முதல்-அமைச்சரே இங்கு போட்டியிடுவதாக நினைத்து அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

மத்தியில் வலிமையான ஆட்சி வர வேண்டும் என்பதற்காக நாம் இந்த தேர்தலில் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். ஆனால் தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அவர்களுக்கு கொள்கை, கோட்பாடு கிடையாது. ஆனால் மக்கள் நலனை பற்றி சிந்திக்கிற தலைவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து கூட்டணியை அமைத்துள்ளோம். 2014-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. 37 இடங்களிலும், ஒரு இடத்தில் பா.ம.க.வும், ஒரு இடத்தில் பா.ஜனதா கட்சியும் வென்றது. ஆனால் அதை விட பல கட்சிகள் இணைந்து தற்போது மெகா கூட்டணியுடன் போட்டியிடுகிறோம்.

நமது கூட்டணி வெற்றி கூட்டணியாகும். 70 சதவீதம் வாக்குகள் நம்மிடம் இருக்கிறது. ஆனால் அதைவிட கூடுதல் வாக்குகளை பெற வேண்டும். கருத்து கணிப்புகளை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு ஆகும். கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் நானும், குமாரபாளையம் தொகுதியில் அமைச்சர் தங்கமணியும் ஜெயிக்க மாட்டார்கள் என்று கூறினார்கள். நாங்கள் ஜெயிக்கவில்லையா?. கருத்து கணிப்புகள் பற்றி நமக்கு கவலையில்லை. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், என்னை பற்றியும், அமைச்சர்கள் பற்றியும் தேவையில்லாமல் விமர்சனம் செய்து பேசி வருகிறார். அதோடு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு இந்த தேர்தலில் நாம் பதிலடி கொடுக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் தனது தரத்தை அவரே குறைத்து கொள்கிறார்.

ஜெயலலிதா இறப்புக்கு பிறகு, அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும், அ.தி.மு.க. கட்சி உடைந்துவிடும் என்று மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் மு.க.ஸ்டாலின் விரக்தியின் விளிம்பில் பேசி வருகிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியுடன் தி.மு.க. அங்கம் வகித்தபோது, தமிழகத்திற்கு என்ன திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. புதிய தொழிற்சாலைகளோ, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டதா?. அவர்கள் எதையும் செய்யவில்லை. குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பதவி சுகத்தை அனுபவித்தார்கள். மத்திய மந்திரி முரசொலிமாறன், உடல்நலக்குறைவால் ஒரு வருடத்திற்கு மேல் இருந்தபொழுது கூட, அவர் கேபினட் மந்திரியாகவே இருந்தார்.

மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். திறமைமிக்க மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். 130 கோடி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைந்தவுடன், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுமாறு முதலில் வலியுறுத்தப்படும். அவ்வாறு அந்த திட்டம் நிறைவடைந்தால் நமக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதால் நாங்கள் தைரியமாக ஓட்டு கேட்டு வருகிறோம். ஆனால் தி.மு.க. எதையும் செய்யவில்லை. அவர்களை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Next Story