வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் தேர்தல் அதிகாரி உத்தரவு


வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் தேர்தல் அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 8 April 2019 10:45 PM GMT (Updated: 8 April 2019 8:57 PM GMT)

வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தேர்தல் அதிகாரி அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை என 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளிலேயே கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தான் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். கரூரில் தேர்தலையொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பே, கண்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையிலான எந்திரங்கள் ஆகியவை கரூருக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் முதல் கட்ட சோதனை, மாதிரி வாக்குப்பதிவு ஆகியவை நடத்தப்பட்டு குலுக்கல் முறையில் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. நோட்டாவை சேர்த்து ஒரு பேலட் யூனிட்டில் 16 சின்னங்கள் மட்டுமே வைக்க முடியும். கரூரில் 42 வேட்பாளர்கள் இருப்பதன் காரணமாக கூடுதலாக பேலட் யூனிட் என்கிற வாக்குப்பதிவு எந்திரங்கள் பெறப்பட்டு வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்து அனுப்பும் பணி தீவரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் வருகிற 18-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி 1,031 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் தேர்தலில் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், வயதானவர்கள் உள்பட அனைத்து வாக்காளர்களுக்கும் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் எந்தவொரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது, வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு எந்தவித இடர்பாடுகளும் இல்லாத வகையில் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவேண்டும். வெயில் காலம் என்பதால் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தேவையான அளவு குடிநீர் இருக்கின்றதா? என்பதை நகராட்சி ஊராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

மேலும் வாக்களிக்க வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் வெயிலில் நிற்காத வகையில் தேவைப்படும் இடங்களில் சாமியானா பந்தல் அமைக்கலாம், கூடுதல் வகுப்பறைகளை வாக்காளர்கள் அமர திறந்துவைக்கலாம். தேவையான அளவு எலக்டரால் பவுடர்களையும், முதலுதவிக்கான மருந்துகளையும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இருப்பில் வைக்க சுகாதாரத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளும், வயதானவர்களும் எளிதில் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லும் வகையில் சாய்தளப்பாதை அமைக்கப்பட்டிருக்கின்றதா? என்பதை பொதுப்பணித்துறை அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாவடிக்குள் சக்கர நாற்காலியில் வைத்து அழைத்துவர தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கத்தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் துணை தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட வருவாய் அதிகாரியுமான சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா மற்றும் அனைத்து சட்டமன்றத்தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், சுகாதாரத்துறை இணை இயக்குநர் விஜயகுமார், துணை இயக்குநர் நிர்மல்சன், உதவி இயக்குநர்கள் உமாசங்கர் (ஊராட்சிகள்), குருராஜன் (பேரூராட்சிகள்), கரூர் நகராட்சி ஆணையர்(பொ) ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story