வீராணம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


வீராணம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 April 2019 10:30 PM GMT (Updated: 8 April 2019 9:06 PM GMT)

வீராணம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், 

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோலாத்துப்பட்டி, காந்தி நகர், சத்யா நகர், புதுவளைவு கிராமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 6 மாதத்திற்கு ஒரு முறைதான் குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடிநீர் கேட்டு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனால் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வீராணம் மன்னார்பாளையம் பிரிவு ரோட்டிற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் 2 பக்கமும் அணிவகுத்து நின்றன. மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதிகளில் குடிநீர் இல்லாததால் குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் தவித்து வருகிறோம். மேலும் குளிக்கவும் தண்ணீர் இல்லை. இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இதுமட்டுமல்லாமல் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டியுள்ளது. குடிதண்ணீர் காசு கொடுத்து வாங்கி வருகிறோம். எங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம், என்றனர்.இதைக்கேட்ட போலீசார், உங்களது குடிநீர் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story