கன்னியாகுமரி தொகுதியில் எனக்கு யாரும் போட்டியில்லை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


கன்னியாகுமரி தொகுதியில் எனக்கு யாரும் போட்டியில்லை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 8 April 2019 11:00 PM GMT (Updated: 8 April 2019 9:22 PM GMT)

கன்னியாகுமரி தொகுதியில் எனக்கு யாரும் போட்டியில்லை, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

குளச்சல்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் முன்பு தனது பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் தமிழ்நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு நடக்கும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது பகல் கனவு. அது நடக்காத காரியம். குமரி மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் நடக்கவில்லை என காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் கூறியுள்ளது நகைச்சுவையாக உள்ளது.

ரூ.4,250 கோடி மதிப்பீட்டில் குமரி இரட்டை ரயில் பாதை திட்டத்தை அவர் தொடங்கி வைத்து பேசும்போது ‘இத்திட்டம் குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு, மாவட்ட வளர்ச்சிக்கு இது பெரிதும் அவசியம்‘ என அவரே இணையதளத்தில் கருத்து பதிவு செய்துள்ளார். அதற்கு என்னிடம் ஆதாரமும் உள்ளது. புதுச்சேரி உள்பட தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் பா.ஜ.க -அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். கன்னியாகுமரி தொகுதியில் எனக்கு யாரும் போட்டியில்லை. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்னர் அவர், புதூர் சந்திப்பு, கருமன்கூடல், பருத்திவிளை, கீழ்கரை, கூத்தாவிளை, லட்சுமிபுரம் மவுன குருசாமி மடம், உடையார்விளை, வி.கே.பி.பள்ளி சமீபம், சி.எம்.சி.காலனி, கொம்பன்விளாகம் வழியாக குளச்சல் அண்ணாசிலை சந்திப்புக்கு வந்தார். அங்கு பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

குமரி வர்த்தக துறைமுகத்தால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. துறைமுகத்துடன் மீன்பிடித்துறைமுகமும் அமையும். மீனவர்கள் அங்கு மீன் ஏற்றுமதியும் செய்யலாம். மேலும், கப்பற்படை தளமும் அமையும் என்பதால் மீன்பிடி தொழில் செய்யும்போது மாயமாகும் மீனவர்களை உடனே கண்டுபிடித்து மீட்க வசதியாக இருக்கும். எனவே குமரி மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் தொடர்ந்திட பா.ஜ.க.வுக்கு ஆதரவு தாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து இரும்பிலி, பனவிளை, சைமன்காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, ரீத்தாபுரம், பெருங்கோடு, இரணியல் சந்திப்பு, நெல்லியறைகோணம், முகமாத்தூர், வட்டம், வேளாங்கோடு, பனங்குழி, கக்குளம் வழியாக இரவு பாத்திரமங்கலத்தில் பிரசாரம் நிறைவடைந்தது.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடிகர் விசு பிரசாரம் செய்தார். அவர் கொட்டாரத்தில் பேசும் போது, தமிழகத்தில் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவது உறுதி. இந்த தொகுதியில் 40 ஆயிரம் கோடிக்கு பல்வேறு திட்டத்தை கொண்டு வந்த பொன்.ராதாகிருஷ்ணனை, நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.

Next Story