குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் சங்கராபுரத்தில் பரபரப்பு
சங்கராபுரத்தில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 1-வது வார்டு பங்களாத்தெரு, 2-வது வார்டு ஆற்றுப்பாதைத்தெரு மற்றும் 13, 14, 15 ஆகிய வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, பொதுக்குழாய் மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழாய் உடைந்ததால் 1, 2, 13, 14, 15 ஆகிய வார்டு பகுதிக்கு மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் உடைந்த குழாயை சரிசெய்து, குடிநீர் வினியோகம் செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதில் ஆத்திரமடைந்த மேற்கண்ட வார்டு பகுதி பொதுமக்கள் நேற்று மாலை 4 மணிக்கு காலி குடங்களுடன் சங்கராபுரம் மும்முனை சந்திப்புக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள், தங்கள் பகுதியில் மின்கம்பம் அமைக்கும் பணியின் போது குழாய் உடைந்ததால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் குடிநீருக்காக பெரிதும் அவதியடைந்து வருகிறோம். அதனால் உடைந்த குழாயை உடனே சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
அதற்கு சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story