தேர்தல் நாளன்று சட்டம்- ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை


தேர்தல் நாளன்று சட்டம்- ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 April 2019 4:30 AM IST (Updated: 9 April 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நாளன்று சட்டம்- ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம், 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு தேர்தல் விதியை மீறி எடுத்துச்செல்லும் விலை உயர்ந்த ஆபரணங்கள், வரைமுறைக்கு அதிகமான பணம், வீட்டு உபயோக பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தில் இருந்ததாக 1,259 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலை அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்த மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு பணி மேற்கொள்ள விழுப்புரம் மாவட்டத்திற்கு 8 துணை ராணுவ படைப்பிரிவினர் வருகை தர உள்ளனர்.

மேலும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள இடங்களில் மக்கள் சிறிதும் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களோ, நட்சத்திர பேச்சாளர்களோ, அரசியல் பிரமுகர்களோ வாக்கு சேகரிக்க தங்கள் பகுதிக்கு வரும்போது பொதுமக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவோ, பிரச்சினையில் ஈடுபடவோ அவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பவோ கூடாது. சாதி, மதம் ரீதியாகவோ, சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலோ யாரும் பேசுதல் அல்லது அதுபோன்ற கருத்துக்களை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் கூடாது.

அதுமட்டுமின்றி தேர்தல் நாளன்று பொதுமக்களுக்கு இடையூறோ அல்லது வாக்குச்சாவடிகளுக்கு அருகே சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைது நடவடிக்கை எடுத்து ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

மேலும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான குற்றங்கள், வாக்குகளுக்கு பணம் கொடுத்தல் மற்றும் சட்டம்- ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பான தங்களது புகார்களை 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story