தலைவர்கள், நடிகர்கள் பேசும் வார்த்தைகளை சினிமா பட தலைப்பாக வைக்க போட்டா போட்டி


தலைவர்கள், நடிகர்கள் பேசும் வார்த்தைகளை சினிமா பட தலைப்பாக வைக்க போட்டா போட்டி
x
தினத்தந்தி 8 April 2019 10:38 PM GMT (Updated: 8 April 2019 10:38 PM GMT)

மண்டியா தேர்தல் களத்தில் தலைவர்கள், நடிகர்கள் பேசும் வார்த்தைகளை சினிமா பட தலைப்பாக வைக்க போட்டா போட்டி போட்டு கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்ய பலர் ஆர்வம் காட்டியுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 28 நாடாளுமன்ற தொகுதிகளில் மண்டியா நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக திகழ்கிறது. இங்கு காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி வேட்பாளராக முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மறைந்த நடிகரும், முன்னாள் மந்திரியுமான அம்பரீசின் மனைவி நடிகை சுமலதா சுயேச்சையாக களம் இறங்கி உள்ளார். அவருக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த தொகுதியில் நிகில் குமாரசாமிக்கும், சுமலதாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நிகில் குமாரசாமிக்கு ஆதரவாக முதல்- மந்திரி குமாரசாமி மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

வேட்பாளர்களான நிகில் குமாரசாமி, சுமலதா ஆகியோர் சினிமாத்துறையை சேர்ந்தவர்கள். சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் நடிகர்களான தர்ஷன், யஷ்சும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மண்டியா பிரசார களத்தில் பயன்படுத்தும் வார்த்தைகள் சினிமாவில் பேசும் வசனங்கள் போன்று பிரபலமாகி வருகின்றன.

‘நிகில் எல்லிதியப்பா (நிகில் எங்க இருக்கிறப்பா)’, ‘மண்டியாத ஹெண்ணு (மண்டியாவின் பெண்)’, ‘மண்டியாத சூசே (மண்டியாவின் மருமகள்)’, ஜோடெத்து(ஜோடி எருதுகள்), கள்ளெத்து (திருட்டு எருதுகள்) ஆகிய வார்த்தைகள் பிரபலமாகி உள்ளன.

இதில் ‘நிகில் எல்லிதியப்பா’ என்ற வார்த்தையை நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி குமாரசாமி தனது மகன் நிகிலை தேடும் வகையில் கூறினார். இதுதொடர்பாக ‘டிக்-டாக்’ வீடியோக்கள் பிரபலமாகி உள்ளன.

மேலும், ‘மண்டியாத சூசே’, ‘மண்டியாத ஹெண்ணு’ ஆகியவற்றை சுமலதா பயன்படுத்தி உள்ளார். ‘ஜோடெத்து’ என்ற வார்த்தையை தன்னையும், நடிகர் யஷ்சையும் சேர்த்து வைத்து நடிகர் தர்ஷன் கூறினார். ‘கள்ளெத்து’ என்ற வார்த்தைகளை ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் நடிகர் தர்ஷன், நடிகர் யஷ் ஆகியோரை விமர்சனம் செய்ய பயன்படுத்தினர்.

இந்த வார்த்தைகளை கன்னட சினிமாக்களுக்கு பட தலைப்பாக வைக்க பலர் முன்வந்துள்ளனர். இந்த வார்த்தைகளை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் முன்பதிவு செய்ய பலர் போட்டா போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் செயலாளர் ஹரீஷ் கூறுகையில், ‘தேர்தல் பிரசாரத்தின்போது முக்கிய பிரமுகர்கள் பேசும் போது கூறிய பிரபலமான வார்த்தைகளை படத்தின் தலைப்பாக பதிவு செய்ய தினமும் 10-க்கும் அதிகமானவர்கள் வந்து செல்கிறார்கள். இதுபற்றி நாங்கள் இன்னும் பரிசீலனை செய்யவில்லை. முறையாக பரிசீலனை செய்து இந்த விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் பலர் படங்கள் எடுப்பது இல்லை. தங்களை பிரபலப்படுத்தி கொள்ளவே அவர்கள் முன்பதிவு செய்ய முயற்சித்து வருகிறார்கள்’ என்றார்.


Next Story