மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 8 April 2019 11:00 PM GMT (Updated: 8 April 2019 10:40 PM GMT)

10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கடலூர், 

பண்ருட்டி சூரக்குப்பம் டேங்க்தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 28). இவருடைய அண்ணனும், அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவியின் தந்தையும் நண்பர்கள். இதனால் 2 பேர் குடும்பமும் நெருங்கி பழகி வந்தனர்.

இதனால் மணிகண்டனுக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த 9.10.2015 அன்று மாணவி வீட்டில் தனியாக இருந்தார். இதை அறிந்த மணிகண்டன், அவரது வீட்டுக்குள் சென்று, அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதற்கிடையே அந்த மாணவியின் தாய் வீட்டுக்குள் வந்தார். இதை பார்த்த மணிகண்டன், தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அந்த மாணவி நடந்த சம்பவத்தை தன்னுடைய தாயிடம் கூறினார். அதன்பிறகு 2 குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த மாணவிக்கு 18 வயது ஆனதும் மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

ஆனால் 4.4.2016 அன்று அந்த மாணவியின் குடும்பத்துக்கு தெரியாமல் மணிகண்டன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது பற்றி அறிந்ததும் அந்த மாணவி தரப்பில் பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு மணிகண்டனை கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வப்பிரியா ஆஜராகி வாதாடினார்.

Next Story